Also Watch
Read this
பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்... இந்த குரலுக்கு சொந்தக்காரர் தமது படைப்பின் வாயிலாக பேசிய சமூக கருத்துக்கள் ஆழமானவை, அவசியமானதாகவும் இருந்தது.
தமிழ் சினிமாவின் சகாப்தம்
தேனி மாவட்டம், அல்லி நகரத்தில் சின்னசாமியாக பிறந்தாலும் பிறகு அங்கேயே சுகாதார ஆய்வாளராக பணி புரிந்தாலும் சினிமா ஆர்வமும் ஈர்ப்பும் சும்மா விடுமா? சென்னை சென்றார் பாரதிராஜா. வந்தவுடன் கிடைத்துவிடுமா வாய்ப்பு, போராட்டம் தான். இறுதியில் ஒரு பயணம் ஆரம்பமானது. தமிழ் திரையுலகின் ஒரு சகாப்தத்தின் பயணம் 1977ல் துவங்கியது. 16 வயதினிலே மூலம் துவங்கிய அந்த பயணம், அது வரை இருந்த சினிமாவின் பாதையை சற்றல்ல, வெகுவாகவே மாற்றி அமைத்தது.

ஒத்தையடிப் பாதையில் இருந்து...
தமிழகத்தின் ஒத்தையடி பாதைகளில் எல்லாம் திரையுல கேமராவின் கண்கள் விரிந்தன. அதுவரை எழுதப்பட்டிருந்த இலக்கணங்கள் மாற்றி எழுதப்பட்டன, எழுதியவர் பாரதிராஜா.
மயிலு, சப்பாணி, பரட்டை... இப்படி இவர் அறிமுகப்படுத்திய கதாபாத்திரங்கள் நிஜத்தில் வாழ்ந்து விட்ட நபர்களைப் போலவே நம்மை ஆட்கொண்டிருக்கும். இன்றைக்கும் நாம் அவருடைய படங்களை பார்க்கையில் நம்முடைய பெற்றோரோ, தாத்தா, பாட்டியோ அல்லது அதற்கும் முந்தைய தலைமுறையோ எப்படியான சமூக கட்டமைப்பில் எப்படியான சூழலில் வாழ்ந்தார்கள் என்பதை நமக்கு வெட்ட வெளிச்சமாக காட்டிவிடும்.

தேடி வந்த விருது
நிஜ மனிதர்களின் மொழியை திரையில் பேச வைத்தார். அதில் சமூக கருத்துக்களும் சேர்ந்தே இருந்தது. பாரதிராஜா திரையில் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது கிராமத்தின் அழகை மட்டுமல்ல. அந்த கிராமங்களுக்குள் புதைந்து கிடந்த சாதிய கோரங்களையும் பெண் அடிமைத் தனத்தையும் தனது கேமரா லென்ஸ் வழியே உலகிற்கு அம்பலப்படுத்தினார்.
வேதம் புதிது மூலம் சமூகப் பார்வையை மாற்றி அமைத்தார். பெயரிலும் மனிதர்களைப் பிரித்து பார்க்கும் சமூகக் கொடுமைகளை தோலுரித்துக் காட்டினார். மாற்று கருத்துடையவர்களின் கருத்தை ஒரு சிறுவனின் கதாபாத்திரம் மூலமாக பேச வைத்த அவருடைய திரைக்கதை சாதுர்யம் அவருக்கான தேசிய விருதையே பெற்றுத் தந்தது. 1988 சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படமாக வேதம் புதிது தேர்வு செய்யப்பட்டது.

கருத்தம்மா மூலம் பெருமை பெற்ற விருது
தென் தமிழக கிராமங்களின் அன்றைய காலகட்டத்தில் உறைந்து கிடந்த பெண் சிசுக் கொலைக்கு எதிராக கருத்தம்மா திரைப்படத்தை இயக்கினார். அரசு செய்ய வேண்டிய விழிப்புணர்வை தனது படத்தின் வாயிலாக மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றார். பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும், படித்தால் இந்த சமூகம் பயன் பெறும் என அழுத்தமாக பேசியிருந்தார். இதில் இன்னொரு விசயம் என்னவென்றால், பாரதிராஜாவின் அம்மா பெயர் மீனாட்சி அம்மாள் என்னும் கருத்தம்மாள். இந்த படத்தின் பெயரும் கருத்தம்மா. இந்த கருத்தம்மாவிற்காக 1995ஆம் ஆண்டு தேசிய விருதும் கிடைத்தது.

காதலுக்காக...
காதலுக்கு குறுக்கே மதம் வரும்போது அதைத் தூக்கி எறி என்ற கருத்தை பேசிய படம் தான் அலைகள் ஓய்வதில்லை. சினிமா என்பது வியாபார நோக்கம் கொண்டது. என்ன தான் இயக்குனர் துணிந்து கதை அமைத்தாலும் அதைச் சுற்றி ஒரு பெரு வணிகம் இருப்பதால், இதை எல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? படம் ஓடுமா? வசூல் வருமா? என்ற கேள்வி இருக்கும். சொல்லப்போனால் அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்கள் பாரதிராஜாவுக்கு அந்த காலகட்டத்தில் விஷப் பரீட்சை தான். வழக்கமான காதல் கதைகளைப் போல் இல்லாமல், உண்மையான காதலுக்காக மத அடையாளத்தை துாக்கி எறிய தயங்காதே என்ற கருத்தை துணிச்சலாக கூறி இருப்பார். என்ன ஒரு வியப்பு என்றால், இத்தகைய முற்போக்கான கருத்தை பெரும்பான்மை மக்கள் பார்த்து, ஏற்றுக் கொண்டு, படத்தை வெற்றியடையச் செய்தனர். இந்த படத்தில் நாம் பார்க்கும் போது, இந்து கிறிஸ்தவ பாத்திரங்களை ஒட்டியதாக இருக்கும். ஆனால், அந்த படத்தில் இடம்பெற்ற ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடலின் வரிகளை பார்த்தால்...
"இங்கிரண்டு ஜாதி
மல்லிகை தொட்டுக் கொள்ளும்
காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை... என்று இருக்கும்.

புதுமைப் பெண்... முதல் மரியாதை...
இப்படி, பாரதிராஜாவின் ஒவ்வொரு படத்தையும் வசனத்தையும் எடுத்து டிகோட் செய்தால், இந்த ஒரு தொகுப்பு போதாது. கணவனால் கைவிடப்படும் பெண் சமுதாயத்தை எதிர்த்து எப்படி நிமிர்ந்து நிற்க வேண்டும் என, புதுமைப்பெண் படத்தில் பேசியிருப்பார் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

முதல் மரியாதை தந்த இமயத்திற்கு இன்று இறுதி மரியாதை. சமூகத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டி, விழிப்புணர்வின் விதைகளை விதைத்தவர் பாரதிராஜா. அவரது படைப்புகள் வெறும் கதைகள் அல்ல. காலத்தின் சான்றுகள். திரைக்கலைஞனின் சமூகப் பொறுப்புணர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு,அவரது திரைப்படங்கள் என்றென்றும் சான்றாகத் திகழும். இயக்குநர் இமயம் பாரதிராஜா தமிழ் சமூகத்திற்கு விட்டுச் சென்ற மாபெரும் பொக்கிஷம், அவரது சிந்தனைப் பேழைகளே...

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved