news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மேட்டூர் அணை திறப்பு எப்போது? டெல்டா விவசாயிகள் காத்திருப்பு
tv

Also Watch

tv

Read this

மேட்டூர் அணை திறப்பு எப்போது? டெல்டா விவசாயிகள் காத்திருப்பு

தப்பிக்குமா குறுவை சாகுபடி?

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மேட்டூர் அணை திறப்பு எப்போது? டெல்டா விவசாயிகள் காத்திருப்பு

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம் என்ற நிலையில், அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு தண்ணீர் திறந்து விடுவது கேள்விக்குறியாகி உள்ளது. குறுவை சாகுபடிக்காக தண்ணீர் தேவையை எதிர்நோக்கி காத்திருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நிலை என்ன?



நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், போதுமான மழை இல்லாததால், கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கர்நாடக அணைகளில் 33.45 டி.எம்.சி அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ள நிலையில், அது 114.57 டி.எம்.சி அளவுக்கு உயர்ந்து, நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டால் மட்டுமே, தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கும் சூழல் உள்ளது.

நீர் வரத்து விநாடிக்கு 424 கன அடியாக சரிவு
அதே போல், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க 94 டி.எம்.சி. நீர் இருப்பு தேவைப்படும் நிலையில், தற்போது 41 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதால் திட்டமிட்டப்படி அணை திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜூன் 11ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து விநாடிக்கு 528 கன அடியிலிருந்து 424 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 79.62 அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கர்நாடகாவிடம் இருந்து தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை
குறுவை சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்க, கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர முதலமைச்சர் விஜய், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள தஞ்சை மாவட்ட விவசாயிகள், இல்லாவிட்டால் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்த மாதத்திற்கான 10 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து கேட்டுப்பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"காவிரி நீர் இருந்தால்தான் சம்பா சாகுபடி"
குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளையும் நாகை மாவட்டத்தில் காவிரி நீரை மட்டுமே நம்பி, நெல் சாகுபடி செய்வதாக கூறிய விவசாயிகள், சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை மட்டுமாவது பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், வீராணம் ஏரியில் உள்ள நீரின் அளவும் குறைந்து கொண்டே வருவதாக கடலூர் மாவட்டம் விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். வீராணம் ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக நீர் திறப்பது போல், குறுவை பாசனத்திற்கும் நீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

"மேட்டூர் அணை நீர் திறப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்"
மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி திறந்து விடப்படும் தண்ணீரானது, காவிரியின் கடைமடை பகுதியான சீர்காழி, கொள்ளிடம் பகுதிக்கு வந்தடைய ஒரு மாதம் ஆகும் நிலையில், நீர் திறப்பு தாமதமானால், கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரும் சமயத்தில் பருவமழை தொடங்கக் கூடும் என்பதால் நடவு செய்யப்படும் இளம் சம்பா நெற்பயிர்கள் மழைநீரால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கவலை தெரிவித்தனர். எனவே, மேட்டூர் அணை திறப்பை ஜூன் மாதத்திலேயே உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்கும் என்று, எதிர்பார்த்து தற்போது விளை நிலங்களை உழுது வருவதாக கூறும் விவசாயிகள், காவிரியில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், மின் மோட்டார் அல்லது ஆயில் மோட்டார் மூலம் விவசாயம் செய்ய முடியும் என்றும் யோசனை கூறி உள்ளனர்.

"காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி நீரை பெற்றுத்தருக"
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் கரூர் மாவட்ட விவசாயிகள், குறுவை சாகுபடி பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். மேட்டூர் அணையில் தற்போது மிகக்குறைந்த அளவே தண்ணீர் இருப்பதாக கவலை தெரிவித்துள்ள புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், பருவமழை பெய்யாதது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்கி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என கூறினர்.

Related Link
குட்டையான வைகை அணை, வரலாறு காணாத நீர்மட்டம் குறைவு

குட்டையான வைகை அணை, வரலாறு காணாத நீர்மட்டம் குறைவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேட்டூர் அணை திறப்பு எப்போது? டெல்டா விவசாயிகள் காத்திருப்பு

7
1 hr 21 mins agoshare
மேட்டூர் அணை திறப்பு எப்போது? டெல்டா விவசாயிகள் காத்திருப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved