Also Watch
Read this
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்து உள்ளது. நீர்வற்றி, வறண்டு குட்டைபோல காட்சியளிக்கும் வைகை அணையில் மிச்சம் மீதி தேங்கியுள்ள தண்ணீரை விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் வைகை அணையின் நீர்மட்டம் இந்த அளவுக்கு குறைய காரணம், விவசாய பெருமக்களின் குற்றச்சாட்டுகள், அதற்கான தீர்வுகள் என்ன?
வைகை அணையின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழே...
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வைகை அணையின் தற்போதைய காட்சி அதிர்ச்சி தருகிறது. கடல் போல் காட்சியளிக்கும் வைகை அணையின் நீர்மட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு கீழே சென்றதால், நீர்வற்றி காணப்படும் சிறு குட்டை போல வைகை அணை உள்ளது.

வெடித்து காணப்படும் மண் திட்டு
அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள பாறைக் குன்றுகள் வெளியே தெரியும் அளவுக்கு தண்ணீர் வற்றியிருப்பது ஒருபுறம் என்றால், பாளம் பாளமாய் வெடித்துள்ள கரிசல் மண் திட்டுகளும், வண்டல்மண் குவியல்களும் மறுபுறம் நிறைந்து காணப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களின் மழைப் பொழிவால் வைகை அணை நிரம்பி வந்தாலும், கடந்த ஆண்டு பொய்த்து போன பருவ மழையும், நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் தொடங்காததே வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதாக உழவர்கள் வேதனை தெரிவித்தனர்.
சேறும், சகதியுமே காரணம்
காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக இருந்தபோதும், அணையில் அதிகபட்சமாக 70 அடி வரை தண்ணீர் தேக்கப்படுவது வழக்கம். 6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட வைகை அணையில், தற்போது 4 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கும் நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும், நீர்தேக்கப் பகுதியிலும் தேங்கியுள்ள சேறும், சகதியும் தான். வைகை அணை கட்டி 65 ஆண்டை கடந்தும் இதுவரை அணை தூர் வாரப்படவில்லை என புகார் கூறப்படும் நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழே குறைந்துள்ளதால் அதனை நம்பியுள்ள 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும், விவசாய பணியும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பாதிக்கும் அபாயம்
வைகை அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு கீழே போனதால், விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் நன்றாக இருக்கும் என விவசாயிகள் கூறினர். வைகை அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு கீழே குறைந்து விட்டதால், குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியாது என ஒரு மாதத்திற்கு முன்பே அதிகாரிகள் தெரிவித்து விட்டதாக கவலை தெரிவித்த உசிலம்பட்டி விவசாயிகள், இதுவரை இருந்த அரசுகளுக்கு அணையில் எப்படி தண்ணீரை தேக்க வேண்டும் என தெரியவில்லை என குற்றம் சாட்டினர்.
உழவர்கள் வேதனை
வைகை அணை கட்டிய நாள் முதல் இதுவரை தூர் வாரப்படவில்லை என மேலூர் பகுதி ஒருபோக சாகுபடி பாசன விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, வைகை அணையை தூர் வாருவதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும், செலவே இல்லாமல் அணையை தூர்வாரலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.

குடிநீர் தட்டுப்பாடு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, அணைப்பட்டி பேரணையும், வைகையும் வறண்டு விட்டதால், வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், நிலக்கோட்டை, ஆத்தூர், சின்னாளப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்ட பாசன விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
6 டி.எம்.சி தண்ணீர் தேக்க வேண்டிய இடத்தில், 4 டி.எம்.சி தண்ணீர் தான் தேக்கப்படுவதாகவும், மீதமுள்ள அனைத்தும் சேறும் சகதியும் தான் என தென்மாவட்ட பாசன விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஆகவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, வைகை அணையை தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கிளை ஆறுகள் வறண்டு போனதற்கு வைகை அணையை தூர் வாராததே முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved