Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 03:14 PM
By: Manigandan Raja

கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான அரையப்பட்டி, பசுவயல், கே. வி. கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குளத்து மண் மற்றும் கிராவல் மண் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளை போவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.
இந்நிலையில் கே.வி.கோட்டை பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் பல க்யூபிக் மீட்டர் அளவிற்கு கிராவல் மண் திருட்டு அனுமதி இல்லாமல் நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் குபேந்திரன் நேரில் ஆய்வு செய்து கிராவல் திருட்டு நடைபெறுவதைக் கண்டு திருட்டில் ஈடுபடுபவர்களை எச்சரித்துள்ளார்.
ஆனால் அந்த கும்பல் கிராம நிர்வாக அலுவலரை மிரட்டும் தொணியில் பேசியதை அடுத்து, இது தொடர்பாக ஆலங்குடி வட்டாட்சியரிடம் அவர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கே.வி.கோட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ரோந்துப் பணியில் இருந்த போது.
கனிமவளக் கொள்ளை கும்பலை கையும் களவுமாகப் பிடித்து இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் மண் வெட்டப் பயன்படும் ஒரு ஜேசிபி இயந்திரம் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி அவற்றின் சாவியை சம்பவ இடத்திற்கு வந்த மாஞ்சான்விடுதி விஏஓ கவிதாவிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளனர்.
தான் வேறு கிராம விஏஓ என்பதாலும், கேவிகோட்டை விஏஓ மாற்றுப்பணிக்குச் சென்று இருப்பதாலும், சாவிகளை ஆலங்குடி வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைக்க கவிதா சென்ற நேரத்தில் அங்கிருந்த கொள்ளை கும்பல், மாற்றுச் சாவிகளைப் பயன்படுத்தி அங்கிருந்த வாகனங்களை எடுத்துச் சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கனிமவளத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட புறம்போக்கு இடத்தில் 3 மீட்டர் ஆழத்திற்கு 8500 க்யூபிக் மீட்டர் அளவிற்கு கிராவல் கொள்ளை நடைபெற்றுள்ளதை உறுதி செய்து இது தொடர்பாக தவளைப்பள்ளம் சிலம்பரசன், புதுக்கோட்டை விடுதி ஜெயராஜ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை கோட்டாட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக விஏஓ போலீசில் கொலை மிரட்டல் மற்றுமோ வாகனங்களை எடுத்துச் சென்றது தொடர்பாக புகாரளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரிகள் கைப்பற்றிய வாகனத்தை அதிகாரிகள் அசந்த நேரத்தில் மாற்றுச்சாவி போட்டு எடுத்துச் சென்ற நிகழ்வு ஆலங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved