Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 01:56 PM
By: Manigandan Raja

வைகை அணையில் 33 அடியாக சரிந்த தண்ணீர் :
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பொய்யாத காரணத்தினாலும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்காகவும் என கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட காரணத்தினாலும் அணை நீர்மட்டம் தற்போது 33 அடியாக சரிந்துள்ளது.
10 சதுர கிலோ மீட்டரில் தேங்கி இருந்த தண்ணீர் தற்போது இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவாக சுருங்கி குளம் போல் மாறி உள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர உசிலம்பட்டி, சேடப்பட்டி, தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த அனைத்து குடிநீர் திட்டங்களுக்கும் சேர்த்து வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது இருப்பில் உள்ள தண்ணீரை வைத்து கணக்கிடும்போது இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
இதுதவிர உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்விற்கு ஒவ்வொரு ஆண்டும் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு அந்த நிகழ்விற்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால் கோடை வெயிலில் உச்ச காலமான மே மாதத்தில் வைகை அணையை நம்பி உள்ள பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. வைகை அணை நீர்மட்டம் சரியும்போதெல்லாம் கை கொடுக்கும் முல்லைப் பெரியாறு அணையிலும் தற்போது நீர்மட்டம் கவலைக்கிடமாக உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் தற்போது 114 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில் 110 அடி மேல் உள்ள நான்கு அடி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு திறக்க முடியும். இதனால் கோடையில் ஏற்பட போகும் கடும் குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையை தற்போதைய தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வைகை அணை வறண்டு போகும் நிலையில் உள்ளது 5 மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved