news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கஞ்சா, போதை ஊசி, பாலியல் அத்துமீறல்
tv

Also Watch

tv

Read this

கஞ்சா, போதை ஊசி, பாலியல் அத்துமீறல்

சேலம்

179

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் பழைய பேருந்து நிலையத்தில், பயன்பாட்டில் இல்லாத கடைகளில் பாலியல் தொழில் முதல் பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைப்பது, போதை ஊசி செலுத்துவது வரை பல்வேறு சமூக விரோத செயல்கள் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா விற்பனை கும்பல் குறித்து மாணவர்கள் தகவல் கூறியும் அதனை கண்டுகொள்ளாமல், மைக்கை தட்டிவிட்டு சென்ற காவலரிடம், நியூஸ் தமிழ் செய்தியாளர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நிலையில், அதிகாரிகளுக்கு தெரிந்தே தான் அட்டூழியம் நடைபெறுவதாக தரைதள கடை வியாபாரிகள் மனம் குமுறி உள்ளனர்.

* சேலம் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம்
* கடைகளை வாடகைக்கு விடுவதில் அரசியல்வாதிகளின் தலையீடு


பள்ளி மாணவர்கள், யூனிஃபார்மோடு போதை ஊசியை உடலில் செலுத்தி, கஞ்சாவை புகைக்கும் காட்சியை பார்க்கும்போது இவர்களின் பெற்றோர் மட்டும் பதறமாட்டார்கள், பிள்ளைகளை பெற்ற எந்த பெற்றோராக இருந்தாலும் மனம் பதறவே செய்யும்.

சேலம் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டது. ஈரடுக்கு பேருந்து நிலையமாக தரம் உயர்த்தப்பட்ட இங்கு 120க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், தரை தளத்தில் உள்ள கடைகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், முதல் தளத்திலும், 2ஆம் தளத்திலும் உள்ள கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. இந்த 2 தளங்களிலும் உள்ள கடைகளை வாடகைக்கு பலர் கேட்டாலும் அதனை வழங்குவதற்கு சில அரசியல் புள்ளிகள் காந்தி நோட்டுக்களை கட்டுக் கட்டாக கறாராக கேட்பதாகவும், அந்த கறாரில் அவர்களுக்கு இஷ்டமில்லாத பட்சத்தில் தான் 50க்கும் மேற்பட்ட கடைகள் அப்படியே கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த, கறைவேட்டிகளின் தலையீட்டு விவகாரம் ஒருபுறம் இருக்க, இழுத்து மூடப்பட்டுள்ள காலி கடை வளாகத்தில் நடக்கும் அட்டூழியமோ சொல்லி மாளாது.

* காலி கடைகளுக்குள் கிடந்த காலி மதுபாட்டில், சிகரெட் துண்டு
* ஆண் மற்றும் பெண்களின் உள்ளாடை, மாணவர்களின் உள்ளாடை
* கடைகளுக்குள் கிடந்த பைகள், உடைந்த கண்ணாடி வளையல்கள்


கடைகளின் வளாகத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உடைந்திருக்க, காலி கடைகளின் ஷட்டரை திறந்து பார்த்தபோது உள்ளே காலி மதுபாட்டில்கள், சிகரெட் துண்டுகள், வாட்டர் பாட்டில்கள், ஆண் மற்றும் பெண்களின் உள்ளாடைகள், மாணவர்களின் உள்ளாடைகள், மாணவிகளின் தோள் பைகள், உடைந்த கண்ணாடி வளையல்கள், பெண்களின் ஹேண்ட் பேக், மாத்திரை ஸ்ட்ரிப்புகள், மாணவர்களின் நோட்புக்கில் இருந்து கிழித்து போடப்பட்டிருந்த பேப்பர்கள் ஆகியவை ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதையெல்லாம்விட, பயன்படுத்தப்பட்டிருந்த ஆணுறைகள் கணக்கில்லாமல் கடைக்குள் கிடந்ததுதான் பதைபதைக்க வைத்தது. இதுஒருபுறமிருக்க, யூனிபார்ம் அணிந்திருந்த மாணவர்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்து கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர். அதேபோல், பள்ளி மாணவிகளும் பம்மிக்கொண்டு நின்ற காட்சியையும் பார்க்க முடிந்தது. சில மாணவர்கள் போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து, அதனை சிரிஞ்சில் ஏற்றி தனது உடம்பில் செலுத்திய காட்சியும் நடுங்க வைத்தது.

* சீருடை அணிந்து கூட்டம் கூட்டமாக கஞ்சா புகைத்த மாணவர்கள்
* பார்ப்போரை பதற வைத்த பள்ளி மாணவிகள் பம்மியபடி நின்ற காட்சி
* போதை மாத்திரைகளை உடலில் செலுத்தி கொண்டிருந்த மாணவர்கள்


அதிலும், சில மாணவர்கள் அரை லிட்டர் வாட்டர் பாட்டிலில் பாதி தண்ணீரை குடித்துவிட்டு, மீதி தண்ணீரில் கஞ்சா புகையை நிரப்பி அதனை வித்தியாசமாக சுவாசித்தனர். கேட்டால் அதுதான் போதையை தலைக்கேற செய்யுமாம். அட அநியாயமே. இதற்காகவா பெற்றோர் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர் என உள்ளுக்குள் மனம் நொந்துகொண்ட நியூஸ் தமிழ் செய்தியாளர் வினோத், அந்த மாணவர்களிடம் பேச்சு கொடுத்தார். அப்போது, நீங்கள் காவலர்களா? என கேட்டுக்கொண்ட மாணவர்களிடம் தன்னை பார்த்தால் காவலர் போன்றா உள்ளது என விருப்பமே இல்லாமல் கவுன்டர் கொடுத்தாலும் அவர்களின் மீது அக்கறைகொண்டு, கஞ்சா விற்பனை செய்வது யார்? எந்த பகுதியில் கிடைக்கிறது? என மெல்ல விசாரித்தார். அதற்கு, முள்வாடி கேட் பகுதியில் கிடைப்பதாகவும், 500 ரூபாய்க்கு கை நிறைய கிடைப்பதாகவும் கூறி அதிர வைத்தனர் மாணவர்கள். இந்த மாணவர்களை வைத்தே கஞ்சா சேல்ஸ் கும்பலை கொத்தாக பிடிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சேலம் டவுண் போலீசாருக்கு தகவல் கொடுக்க செல்போனை எடுத்தார் செய்தியாளர். ஆனால், கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்தது போன்று டவுண் காவல் நிலைய காவலர் அண்ணாதுரையே டீ குடிப்பதற்காக அங்குள்ள கடைக்கு வந்தார்.

* காவலர் அண்ணாதுரையிடம் மாணவர்களை ஒப்படைத்த செய்தியாளர்
* பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது? - காவலர்


சமூக சீர்திருத்தவாதியான அறிஞர் அண்ணாவின் பெயரை தன்னகத்தே கொண்டிருந்த காவலர் அண்ணாதுரையும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டிருப்பார் என்ற நம்பிக்கையில் மாணவர்களை ஒப்படைத்த செய்தியாளர் வினோத், இவர்கள் மூலமே கஞ்சா கும்பலை ரவுண்டு கட்டுங்கள் என கூறினார். ஆனால், காவலர் அண்ணாதுரையிடம் இருந்து வந்த பதிலே வேறு. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது? அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா? என சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை மீது அக்கறையுடன் பேசிய காவலர் யாரையும் நம்மால் திருத்த முடியாது எனக்கூறிவிட்டு மாணவர்களை அப்படியே விட்டுவிட்டார். மாணவர்கள் மீது அக்கறைகொண்டு பேசியதில்கூட ஒரு நியாயம் உள்ளது. ஆனால், முள்வாடி கேட் பகுதியில் உள்ள கஞ்சா சேல்ஸ் கும்பலை மாணவர்கள் மூலமே சுற்றி வளைக்காமல் அசால்ட்டாக விட்டது எந்தவகையில் நியாயம்? என்ற கேள்வி செய்தியாளருக்கு எழுந்தது.

* காவலர் அண்ணாதுரையிடம் மைக்கை நீட்டிய செய்தியாளர் வினோத்
* எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் மைக்கை தட்டிய அண்ணாதுரை
* பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்ற காவலர் அண்ணாதுரை

அதனால், காவலர் அண்ணாதுரையிடம் மைக்கை நீட்டிய செய்தியாளர் வினோத், சமூக விரோதிகளின் கூடாராமாக காலிக்கடைகள் மாறி உள்ளது, பாலியல் தொழில் நடப்பதற்கான ஆதாரமாக அங்கு பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் உள்ளிட்ட பொருட்கள் கிடக்கிறது, கண்ணுக்கு தெரிந்தே கஞ்சா போதைக்கு அடிமையாகி மாணவர்களின் வாழ்க்கை நாசமாகிறது, இதையல்லாம் கண்டும் காணாமல் இருப்பது சரியா? இப்படியே விட்டால் மாணவர்களின் எதிர்காலம் மண்ணாய் போகாதா? என அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். ஆனால், எதற்கும் பதில் சொல்ல விரும்பாத காவலர் அண்ணாதுரை மைக்கை தட்டிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து நடந்து கொண்டே இருந்தார். ஆனாலும், விடாமல் பின்னாலேயே ஓடியபடியே செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அப்படியும், அசாராத அண்ணாதுரை பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

* மேல்தளத்தில் பாலியல் தொழில் நடப்பதாக கூறிய கடை வியாபாரி
* அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்துவிட்டோம் என கூறிய வியாபாரி
* காலி கடைகளில் நடக்கும் அட்டூழியங்கள் அதிகாரிகளுக்கு தெரியாதா?


இந்த காட்சியை கவனித்த தரை தளத்தில் இருந்த ஒரு கடை ஓனர், மேல்தளத்தில் கஞ்சா விற்பனை மட்டுமா நடைபெறுகிறது? அதிகாலை 5 மணி மற்றும் இரவு 9 மணிக்குமேல் வந்து பாருங்கள் பாலியல் தொழிலே நடைபெறுவதாக மனம் குமுறினார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர், காவலர்கள் என எல்லோரிடமும் புகார் மனு கொடுத்துவிட்டோம், அவர்களும் பெயருக்கு மாணவர்களை விரட்டிவிடுவார்கள், அவ்வளவுதான். அடுத்து வழக்கம்போல் சமூகவிரோத செயல்கள் நடந்து கொண்டுதான் இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.

* ”இனியும் காலம் தாமதிக்காமல் கடைகளை வாடகைக்கு விட வேண்டும்”
* சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை


100 மீட்டர் தூரத்தில் பள்ளி, அதே 100 மீட்டர் தூரத்தில் நகர காவல் நிலையம், 600 மீட்டர் தூரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருந்தும் இந்த காலி கடைகளில் நடக்கும் அட்டூழியங்கள் அதிகாரிகளுக்கு தெரியாதா? அதேபோல் பேருந்து நிலையத்திலேயே பிங்க் பேட்ரோல் வண்டி, பேட்ரோல் வண்டி, ரோந்து போலீஸ் இருந்தும் அவர்களுக்கும் இதெல்லாம் தெரியாதா? என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் கோடிகளை கொட்டி கடைகளை கட்டிய மாநகராட்சிக்கு நிர்வாகத்திற்கு அந்த காலி கடைகளில் 100 ரூபாய்க்கு பூட்டு போடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஒருவேளை பூட்டுக்கான நிதி ஒதுக்கவில்லையா? சரி அத்தனை கடைக்கும் கூட பூட்டு வேண்டாம், படிக்கட்டு என்ட்ரன்சில் ஒரு கேட்டைபோட்டு அந்த கேட்டுக்கு ஒரே ஒரு பூட்டு போட முடியாதா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

* செய்தி வெளியான ஒரு மணி நேரத்திலேயே ஓடி வந்து ஆய்வு செய்த அதிகாரிகள்
* முன்கூட்டியே அதிகாரிகள் ஏன் ஆய்வு செய்யவில்லை? என பலரும் கேள்வி


இதுஒருபுறமிருக்க, கடைகளின் அவல நிலை குறித்து நியூஸ் தமிழில் செய்தி வெளியானதும் மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் அங்கு வந்து அரக்க பறக்க ஆய்வு செய்தனர். செய்தி வெளியான ஒருமணிநேரத்திலேயே ஓடோடி வந்து ஆய்வு செய்த அதிகாரிகள் இத்தனைகாலமும் ஓடோடி வந்திருந்தால் மாணவர்கள் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கமாட்டார்கள் எனவும் கூறி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்...
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் வினோத்.

Related Link
3 மனைவிகள், குடும்பமாக சேர்ந்து கேடி வேலை

3 மனைவிகள், குடும்பமாக சேர்ந்து கேடி வேலை

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 32 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved