பீடம் வைத்த விவகாரத்தில் மோதல் : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் மந்தையில் முத்தாலம்மன் கோவில் உள்ளது இதற்கு எதிராக மற்றொரு தரப்பினர் பீடத்தை வைத்து அது தங்கள் இடம் எனக்கூறி வழிபட்டு வந்ததால் கிராமத்தில் இரு தரப்பினருக்கும் இடையே இரண்டு மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் கோவில் முன்பு எந்நேரமும் பத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து ஒரு தரப்பினர் பீடத்தை அகற்றாததால் கோவில் பீடத்தின் எதிரே மற்றொரு தரப்பினர் விநாயகர் சிலை வைத்ததால். இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குரிய இடத்தில் இருக்கும் பீடத்தையும் விநாயகர் சிலையையும் அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்புடன் பீடமும்,விநாயகர் சிலையும் அகற்றப்பட்டது.இருதரப்புக்கும் இடையே மோதலை தடுக்கும் வண்ணம் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கிராமத்தில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர் வீட்டில் இன்று திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமணம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறுவதால் மாப்பிள்ளை வீட்டார் நேற்று இரவு நிச்சயம் செய்து பெண்ணை அழைத்துச் செல்வதற்காக சீர்வரிசை தட்டுகளை பீடம் இருந்த இடத்தில் வைத்துள்ளனர். அப்போது மற்றொரு தரப்பினர் இந்த இடத்தில் வைக்க கூடாது என தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட சண்டையாக மாறியது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். இரு தரப்பும் சமாதானம் ஆகாத நிலையில் திடீரென ஒருவருக்கொருவர் மாறி மாறி கற்களை எடுத்து வீசத் தொடங்கினர். இதனால் அப்பகுதியே கலவர பூமியாக மாறியது. இச்சம்பவத்தில்ல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் படையைச் சேர்ந்த விஜயசங்கர்,கிருஷ்ணன் இருவரும் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்பிக்கு தகவல் அளித்து 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலவரத்தை கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தில் இருதரப்பைச் சேர்ந்த பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர் இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த மணவாளன்,ஜெயக்குமார்,லட்சுமி ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவுத்தால் ஆலம்பட்டி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.தொடர்ந்து பிரச்சனை எழாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த கல்வீச்சு சம்பவத்தில் ஒரு தரப்புக்கு சொந்தமான கோவில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகை அறை மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி பெட்டி இரண்டும் சேதமடைந்தது.சம்பவம் அறிந்து தென்மண்டல ஐஜி மாநகர காவல் கண்காணிப்பாளர் விரைந்து வந்து கிராமத்தை கட்டுப்பாட்டில் எடுத்து தற்போது அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருதரப்பு மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து திருமங்கலம் போலீசார்தரப்பிலும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினும் கொடுத்த புகாரின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருவதால் கிராமத்தில் உள்ள இரு தரப்பைச் சேர்ந்த ஆண்கள் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். ஆலம்பட்டி கிராமத்தில் இரு தரப்புக்கு இடையே ஏற்கனவே மோதல் போக்கு நிலவிய சூழ்நிலையில் முன் விரோதம் காரணமாக கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டு போலீசார் உட்பட 11 பேர் காயமடைந்த சம்பவம் ஆலம்பட்டி பகுதியில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. Related Link மலைக்குன்றில் இரவு பகலாக கொள்ளை போகும் மண்