Also Watch
Read this
By: Manigandan Raja

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், ஒருவழிப்பாதையில் (One Way) தவறாக வந்த சரக்கு லாரியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி தடுத்து நிறுத்தி, ஓட்டுநருக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேரிகாடுகளை அகற்றி மாற்று ஏற்பாடு செய்ய காவல்துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
பள்ளிபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் ரூ.420 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
மேம்பாலம் திறக்கப்பட்ட நாளிலிருந்தே கட்டுமான குறைபாடுகள், ஆங்காங்கே விரிசல்கள், உள்ளூர் மக்களுக்கான போதிய அணுகுமுறை வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, உள்ளூர் மக்களுக்காக அமைக்கப்பட்ட மேம்பாலத்தை அவர்களே எளிதாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் எதிரே ஒருவழிப்பாதையை ஒழுங்குபடுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேரிகாடுகளில் பெரிய கயிறுகள் கட்டப்பட்டிருந்ததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அவற்றை கவனிக்க முடியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை குறித்து நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான விஜயலட்சுமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஒருவழிப்பாதையில் விதிமுறையை மீறி எதிர்திசையில் வந்த சரக்கு லாரியை அமைச்சர் தடுத்து நிறுத்தி, "அதுதான் ஒன்வே என்று போர்டு வைத்திருக்கிறார்களே அப்புறம் ஏன் ராங் ரூட்டில் வருகிறீர்கள்? இனிமேல்
இப்படி வரக்கூடாது," என்று ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்து, லாரியை திருப்பி அனுப்பினார்.
தொடர்ந்து, காவல்துறையினரை தொலைபேசி மூலம் சம்பவ இடத்திற்கு வரவழைத்த அமைச்சர், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பேரிகாடுகளை அகற்ற வேண்டும் என்றும், அதற்கு பதிலாக பாதுகாப்பான நிரந்தர கற்கள் அல்லது டிவைடர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், "மக்களின் கோரிக்கையே முக்கியம். பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என காவல்துறையினரிடம் அமைச்சர் விஜயலட்சுமி வலியுறுத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்ததுடன், மேம்பாலத்தில் நிலவும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved