Also Watch
Read this
By: Web Team

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு, தெற்கு மியான்மர் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவல்:
அக்டோபர் 31ஆம் தேதி மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று நவம்பர் ஒன்றாம் தேதி, காலை 5.30 மணி அளவில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 8.30 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேலும், கிழக்கு - வடகிழக்கு திசையில், வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக, தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மஹாராஷ்டிரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறையக் கூடும்.
தெற்கு மியான்மர் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், மத்தியகிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
வரும் 3ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
4, 5ஆம் தேதிகளில், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
6,7ஆம் தேதிகளில், தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
நாளை 2ஆம் தேதி, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வரும் 5ஆம் தேதி வரை தமிழக கடலோர பகுதிளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.