Also Watch
Read this
By: Fyrose Banu

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் பணமோசடி வழக்கில் மேலூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட்டார். மேலூர் காத்தாபிள்ளை தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (54). இவர் தனது இடத்தை 45 லட்சம் கடனாக பெற்றுக் கொண்டு ராதாகிருஷ்ணன் என்பவருக்கு பதிந்து கொடுத்துள்ளார். அவர் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு பதிந்து கொடுத்து விட்டதால் அந்த இடத்தை மீட்பதற்கு சாமிநாதன் வரிச்சூர் செல்வத்தை நாடி உள்ளார். 
பணத்தை தர மறுத்து மிரட்டல்
வரிச்சூர் செல்வம் அவ்விடத்தை மீட்டுத் தருவதாக கூறி 67 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு இடத்தினை மீட்டு தராமலும், திரும்ப பணம் கேட்டபோது, பணத்தை தர மறுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து புகாரின் அடிப்படையில் மேலூர் காவல்துறையினர் வரிச்சியூர் செல்வம், மேலூர் பெருமாள்பட்டியைச் சேர்ந்த அன்புநாதன், தாமரைப்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார், மற்றும் வரிச்சியூர் செல்வத்தின் கார் ஓட்டுநர் அருண் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வரிச்சியூர் செல்வத்தை கைது செய்த போலீசார்
இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலூர் தனிப்படை காவல்துறையினர் பெங்களூரு சென்று அங்கிருந்த ரவுடி வரிச்சியூர் செல்வத்தை கைது செய்து திங்கட்கிழமை இரவு மேலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் புகார்தாரருக்கு தரவேண்டிய 67 லட்சம் ரூபாய்க்கு பதிலாக உடனடியாக 67 சவரன் தங்க நகையை வரிச்சியூர் செல்வம் தரப்பில் புகார்தாரருக்கு தரப்பட்டது. இதனையடுத்து வரிச்சியூர் செல்வம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டு மேலூர் காவல்நிலையம் அழைத்து வந்த நிலையில், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved