Also Watch
Read this
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ப்ளு சூட்கேஸில் தலை, கை, கால் இல்லாத ஆணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பதை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில்...
ரயிலை பிடிப்பதற்காக பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு பயணிகள் வரத் தொடங்கிய அதிகாலை 5.20 மணியளவில், நான்காவது நடைமேடையில் மிகுந்த துர்நாற்றம் வீசியது. இந்நிலையில் படிக்கட்டின் அருகே அனாமத்தாக ப்ளு கலரில் சூட்கேஸ் இருப்பதை, சுமை தூக்கும் தொழிலாளர் ஒருவர் கவனிக்கவே, சந்தேகத்துடன் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், சூட்கேஸை திறந்து பார்த்ததில் ரத்தத்துடன் பிளாஸ்டிக் கவர் இருந்தது. அதனையும் பிரித்து பார்த்ததில் தலை, கைகள் மற்றும் கால்கள் இல்லாத ஆண் உடலின் சில பாகங்கள் மட்டும் துண்டு துண்டாக இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்து போயினர்.

விசாரணை தீவிரம்
இளைஞரை வேறு இடத்தில் கொலை செய்துவிட்டு பின் உடலை சூட்கேஸில் கொண்டு வந்து ரயில் நிலையத்தில் வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். இதனை தொடர்ந்து உடலின் பாகங்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், அந்த ரயில் நிலையம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்து வருகின்றனர். உயிரிழந்தவர் யார் என்பதை கண்டறிய சென்னை மற்றும் பக்கத்து மாவட்ட காவல் நிலையங்களில் பதிவான மிஸ்சிங் புகார்களை ஆராய்ந்து வருகின்றனர்.

சிசிடிவி இல்லை
இதனை தொடர்ந்து ப்ளு சூட்கேஸை பார்த்து தகவல் கொடுத்த முனுசாமியை போலீசார் விசாரணை நடத்தினர். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் பணிக்கு வந்த போது துர்நாற்றம் வீசிய சூட்கேஸை கண்டு பதறியடித்துக்கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறினார். சூட் கேஸ் இருந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளும் இல்லையென ஆட்டோ ஓட்டுநர் கூறினார். சென்னையிலுள்ள ரயில் நிலையங்களில் கண்காணிப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் தொடர்ந்து கொலை சம்பவங்களும், சட்டவிரோத செயல்களும் நடந்து வரும் சூழலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.