Also Watch
Read this
By: Manigandan Raja

கொள்முதல் செய்ய மறுப்பு :
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்திற்குட்பட்ட தாழக்குடி பேரூராட்சி பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் அளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் விவசாயத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது கும்பப் பூ சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மணிகளை தாழக்குடியில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு
செல்கிறார்கள் ஆனால் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சில விவசாயிகள் கொண்டு வரும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பதால் ஈரப்பதம் குறைய பத்து நாட்கள் வரை கொள்முதல் நிலையத்தின் வெளியே தரையில் கொட்டி குவித்து வைத்துள்ளனர்.
இந்த நெல் மணிகள் ஈரப்பதம் குறைவதற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதற்கிடையே சில விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஈரப்பதம் குறையாததால் நெல்மணிகளை எடுத்துச் சென்று வெளிச்சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள்.
அத்துடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நெல் குவியல் மேல் தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர் இவ்வாறு ஒரு வாரத்திற்கு மேலாக நெல் குவியல்கள் ஈரப்பதம் குறையாமல் இருக்கின்றன இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர்.
மேலும் அரசு விவசாயிகளின் நலன் கருதி நெல்லின் ஈரப்பதத்தை 20 முதல் 21% ஆக உயர்த்த வேண்டும் என்று அறுவடை செய்த நெல்லினை விரைவில் கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved