Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு முகநூல் (Facebook) மூலம் அறிமுகமான நபர்கள், 'xs Markets' என்ற இணையதளத்தில் சர்வதேச கரன்சி வர்த்தகம் செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பிய பாதிக்கப்பட்ட நபர், பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.24,64,800 பணத்தை அந்த நபர்கள் குறிப்பிட்ட வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், பணம் அனுப்பிய பிறகு லாபத் தொகையோ அல்லது அசல் தொகையோ திரும்பக் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சாந்தி வழக்குப்பதிவு செய்து, பணப் பரிவர்த்தனை நடந்த வங்கிக் கணக்குகள் மற்றும் செல்போன் எண்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையின் அடிப்படையில், இந்த மோசடியில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த விவேக்ராஜா (33) மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த பரேஷ்குமார் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.3 லட்சம் பணத்தைப் போலீசார் மீட்டுப் பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த ஆன்லைன் மோசடி கும்பலின் பின்னணி குறித்துச் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.