Also Watch
Read this
By: Manigandan Raja

டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் தமிழர்களின் தொன்மை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கீழடி அகழாய்வுப் பகுதிகள் மற்றும் அருங்காட்சியகங்களைப் பார்வையிட்டனர்.
தொல்பொருள் அருங்காட்சியகம்: கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல் பொருட்களில் குறிப்பிடத்தக்க 13 ஆயிரத்து 384 பொருட்களைக் கொண்டு, ஆறு கட்டடத் தொகுதிகளாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 2023 மார்ச் முதல் பொதுமக்களின் பார்வைக்காகச் செயல்பட்டு வருகிறது.திறந்தவெளி அருங்காட்சியகம்: அகழாய்வு நடந்த இடங்கள் ₹24 கோடியே 30 லட்சம்
செலவில் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி திறக்கப்பட்டது இந்த இரண்டு அருங்காட்சியகங்களையும் காண்பதற்கு நாள்தோறும் சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
டெல்லியில் வசிக்கும் தமிழர்கள் தங்களின் பிள்ளைகளைச் சேர்க்கும் முதன்மையான பள்ளிகளில் ஒன்றாக டி.டி.இ.ஏ (DTEA) சீனியர் செகண்டரி பள்ளி விளங்குகிறது. இப்பள்ளியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு முறைகளை இளந்தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது என்பதற்காக, இப்பள்ளி நிர்வாகம் ஆண்டுதோறும் மாணவர்களை 12 நாட்கள் தமிழகத்திற்குப் பண்பாட்டுக் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகம் வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தங்களின் பயணத்தின் முதல் நாளான நேற்று கீழடிக்கு வருகை தந்தனர்.

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தில் உள்ள உறை கிணறுகள், செங்கல் கட்டுமானங்கள், சுடுமண்பாண்டங்கள் ஆகியவற்றையும், தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அணிகலன்கள், ஆயுதங்கள், பாசிகள், மணிகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் வரிவடிவ எழுத்துகளையும் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மிகச்சிறந்த நகர நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான சான்றுகளைக் கண்டு அவர்கள் பெருமிதம் அடைந்தனர்.
மாணவி அனுஷ்கா கூறுகையில்:
பண்டைய கால மக்கள் மிகச்சிறந்த நகர நாகரிகத்துடன் வாழ்ந்துள்ளனர். தண்ணீரைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தியதோடு, கழிவுநீரை வெளியேற்றவும் முறையான பாதைகளை அமைத்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய அணிகலன்கள், பாசிகள் மற்றும் குறியீடுகள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன" என்றார்.
கணித ஆசிரியர் அனுராதா கூறுகையில்:
"டெல்லியில் வளரும் தமிழ் குழந்தைகள் தமிழகத்தின் பழக்கவழக்கங்களையும் பாரம்பரியத்தையும் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் இந்தச் சுற்றுலாவை ஏற்பாடு செய்கிறோம். தமிழ் குழந்தைகளுடன் இணைந்து, விருப்பப்படும் பிற மாநிலக் குழந்தைகளையும் இந்தச் சுற்றுலாவிற்கு அழைத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.