Also Watch
Read this
By: Manigandan Raja

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு சூரிய உதயம் மற்றும் சூரியன் அஸ்தமனம் ஆகும் இயற்கை அற்புத காட்சிகளை காணவும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா படகில் நேரில் சென்று பார்வையிடவும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குமரிக்கு வருகை தருவார்கள்.
விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். மொகரம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி இன்று சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் குவிந்தனர். சூரிய உதயத்தையும் கண்டு ரசித்தனர். சுற்றுலா தல பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன.

நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக தெரு நாய்கள் அங்கும் இங்கும் ஓடி திரிவதால் சுற்றுலா பயணிகள்
மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்கு சுற்றி திரியும் நாய்களைக் கண்டு பயப்படும் சூழ்நிலை உள்ளது. இது சம்பந்தமாக பலமுறை கன்னியாகுமரி நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆகையால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா தலப் பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.