Also Watch
Read this
By: Manigandan Raja

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே நந்தன் தட்டை பகுதியில் உள்ள கடனாநதி அணையின் காங்கேயன் கால்வாய் மூலமாக சாரல் குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இதன் மூலம்
அப்பகுதியில் சுமார் 450 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் தற்போது விவசாயிகள் இடை குறுவை சாகுபடியாக நெற்பயிர் பயிரிட்டுள்ளனர். அதன்படி கடந்த மார்ச் மாதம் விவசாய பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது அவை
கதிர் வந்து நன்றாக வளர்ந்து காணப்படுகிறது. இந்தப் பயிர்கள் ஆகஸ்ட் மாதம் அறுவடை செய்யப்படும் நிலையில் உள்ளன.
இந்த நிலையில் தற்போது இந்த சாரல் குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாயில் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெறுவதாக கூறி அதிகாரிகள் தண்ணீரை அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குளத்திலும் தண்ணீர் இல்லாததால் வயல்களில் ஈரப்பதம் முற்றிலும் குறைந்து மண் காய்ந்து பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் கதிர் வந்த நெற்பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல், பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக கடன் பெற்று, அதிக செலவு செய்து வளர்த்த நெற்பயிர்கள் தற்போது கண்முன்னே கருகி வருவதை பார்த்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நேரத்தில் ஒரு சில நாட்களுக்குள் பாசன நீர் கிடைத்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக குளத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு கதிர் வந்துள்ள நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கும் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.