Also Watch
Read this
By: Manigandan Raja

நெல்லை மாவட்டம் முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக எழுந்துள்ள புகார் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கூடல், பாப்பாக்குடி மற்றும் வடக்கு அரிநாயகிபுரம் உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராமங்களில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகத் தாமிரபரணி ஆறு விளங்கி வருகிறது. இந்த ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலமே இப்பகுதிகளுக்குத் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுமட்டுமன்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கூட்டுப் பெட்டுக் குடிநீர் திட்டம் வழியாக இங்கிருந்துதான் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள உறை கிணறு ஒன்று உடைந்து, அதில் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆற்றில் அடித்து வரப்படும் அசுத்தமான கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் உயிரிழந்த விலங்குகளின் உடல்கள் ஆகியவை நேரடியாக அந்த உறை கிணற்றுக்குள் சென்று கலக்கின்றன. எவ்வித சுத்திகரிப்பும் இன்றி இந்த அசுத்த நீர் அப்படியே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதால், இப்பகுதி மக்களுக்குக் கடுமையான தொற்றுநோய்கள் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆதிமூலம் அவர்கள் கூறுகையில்....
ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் உறை கிணறு உடைந்திருப்பது பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, போர்க்கால அடிப்படையில் உறை கிணற்றைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், குடிநீர் வடிகால் வாரியமும் இந்த விஷயத்தில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.