Also Watch
Read this
By: Manigandan Raja

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேட்டவரம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்ற பள்ளி மாணவர், போளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், கண் வலி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர், இன்று வியாழக்கிழமை மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, மாணவர் பள்ளிக்கு வராதது குறித்து கேட்ட தலைமை ஆசிரியர், அவரை அடித்து கண்டித்ததுடன், மாணவரின் பள்ளி பையை பறிமுதல் செய்து, நீ பள்ளிக்கு வர வேண்டாம், வீட்டிற்கு சென்று விடு என கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் மனமுடைந்த மாணவர் சந்துரு, பள்ளி வளாகத்திற்கு வெளியே அழுதபடி நின்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மாணவரிடம் விசாரித்தபோது, தலைமை ஆசிரியர் என்னை அடித்துவிட்டார் என கதறி அழுதபடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களிடம் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டிய கல்வி நிறுவனத்தில் இவ்வாறான சம்பவம் நடந்ததாக கூறப்படுவது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, உண்மை நிலையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.