Also Watch
Read this
ராமநாதபுரத்தில், பயணிகள் 45 நிமிடங்கள் அரசுப் பேருந்துக்கு உள்ளேயே காத்திருந்த நிலையில் கண்டக்டரும், டிரைவரும் ஒரு திருமண வீட்டில் மொய் எழுதி சாவகாசமாக சாப்பிட்டுவிட்டு வந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. யூனிபார்மோடு பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், பெண்கள் ஆகியோரை பேருந்தில் அமர வைத்துவிட்டு, பொறுமையாக விசேஷ வீட்டுக்கு சென்று வந்த அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

முத்துப்பேட்டை வழியாக...
ராமநாதபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெகுநாதபுரம், முத்துப்பேட்டை வழியாக பெரியப்பட்டினம் நோக்கி 4F என்ற அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. மாலை 4.30 மணி என்பதால் பள்ளி முடிந்து மாணவர்களும் அந்த பேருந்தில் ஏறி இருந்தனர். அந்த பேருந்தை அஜித்குமார் என்பவர் இயக்க, வேல்முருகன் என்பவர் நடத்துனராக இருந்த நிலையில் திடீரென புதுக்குடியிருப்பில் நிறுத்தப்பட்டது.

பேருந்திற்குள் பயணிகள்...
ஏன் நிற்கிறது? என்ன காரணம்? என எதுவுமே புரியாமல் பேருந்துக்குள் இருந்த பயணிகள், தங்களுக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருக்க, அங்குள்ள ஒரு திருமண வீட்டிற்கு சென்ற டிரைவரும், கண்டக்டரும் மொய் எழுதிவிட்டு, வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக வந்துள்ளனர். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேருந்துக்குள் இருந்த பெண் பயணிகள் இதனை வீடியோ எடுத்துள்ளனர்.

வைரலான வீடியோ
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அரசு பேருந்து டிரைவரும், கண்டக்டரும் தங்கள் தனிப்பட்ட விசேஷ வீடுகளுக்கு சென்று வர பேருந்தில் உள்ள பயணிகள் காத்திருக்க வேண்டுமா? அதுவும் பணி நேரத்தில் தான் செல்வார்களா? பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் பேருந்துக்குள் இருக்கிறார்கள் என்ற பொறுப்பு இல்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அலட்சியமே...
ஏற்கெனவே, D பிளாக், வழுதூர் விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் 4F பேருந்து பெரிய அளவில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை என்றும் குறிப்பாக இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிரை மதிப்பதே இல்லை எனவும் அங்குள்ள மக்கள் குற்றம்சாட்டும் நிலையில் பொறுப்பான அரசு ஊழியர்கள், அவர்கள் இஷ்டத்திற்கு இருக்கலாமா? எனவும் கொந்தளிக்கின்றனர். அதேபோல், என்ன தவறு செய்தாலும் அதிகபட்சம் பணியிடை மாற்றம்தானே? வேலையைவிட்டா தூக்கிவிட முடியும்? என்ற மனநிலையே அவர்களை இதுபோன்ற அலட்சியத்தில் ஈடுபட வைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.