Also Watch
Read this
தமிழக அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற தத்துவத்திற்கு இலக்கணமாக மதிமுகவின் தற்போதைய அரசியல் நகர்வுகள் மாறியுள்ளன. என் வாழ்நாளெல்லாம் திமுகவிற்காக மட்டுமே குரல் கொடுப்பேன் என்று முழங்கிய வைகோ, தற்போது தவெகவின் பிரதான குரலாக மாறியிருப்பது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உற்று நோக்க வைத்திருக்கிறது. முன்னாள் முதல்வர் கலைஞரின் நிழலாக இருந்து, பின்னர் ஸ்டாலினுக்கு அரணாக நின்ற வைகோவின் இந்த திடீர் ரூட் மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

அன்றும் இன்றும்
என்னாச்சோ ஏதாச்சோ? யாரு கண்ணு பட்டுச்சோ? தெரியவில்லை. நேற்று வரை அறிவாலயம் பக்கம் பாசமழை பொழிந்து வந்த வைகோ, இன்று அப்படியே தனது அரசியல் பாதையை மாற்றி, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பக்கம் தாவியிருக்கிறார்.
கடந்த 2006ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து அதிமுகவிடம் தஞ்சமடைந்த மதிமுக, 2011ல் அங்கிருந்தும் வெளியேறி தனிப்பாதை அமைத்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2017ல் மீண்டும் திமுக பக்கம் வந்த வைகோ, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் முதற்கொண்டு, என் போன்றோர் மு.க.ஸ்டாலினை மாண்புமிகு முதலமைச்சர் என்று அழைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என உணர்ச்சி பெருக்குடன் முழங்கினார். கலைஞருக்கு எப்படி உறுதுணையாக நின்றேனோ, அதேபோல் ஸ்டாலினுக்கும் நிற்பேன் என்று உருகிய வைகோவின் தற்போதைய தவெக ஆதரவு நிலைப்பாடு, அரசியல் நோக்கர்களை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

மதிமுக தனிச்சின்னத்தில்...
2019 மக்களவை தேர்தலில், ஈரோட்டில் உதயசூரியன் சின்னம், வைகோவிற்கு ராஜ்யசபா சீட் என திமுக-மதிமுக பந்தம் மிகவும் சுமுகமாகவே தொடங்கியது. தொடர்ந்து, 2021 சட்டமன்ற தேர்தலிலும் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு, ஆறிலும் உதயசூரியன் சின்னத்திலேயே நின்று 4 இடங்களில் மதிமுக வெற்றியும் பெற்றது. ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையேயான விரிசல் 2024 நாடாளுமன்ற தேர்தலின் போதுதான் பகிரங்கமாக வெடித்தது. திருச்சி தொகுதியில் மீண்டும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டும் என திமுக வலியுறுத்தியபோது, துரை வைகோவின் பிடிவாதம் காரணமாக மதிமுக தனிச் சின்னத்தில் நின்று களம் கண்டு வெற்றியும் பெற்றது.

ஏன் வெளியேறினார்?
இருப்பினும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் கூட மதிமுக 4 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் நின்று, கடையநல்லூர், சீர்காழி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. இவ்வாறு தொடர்ந்து உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வென்றுவிட்டு, தற்போது திடீரென புதியதாக சின்னத்தை திணிப்பது போல மதிமுக வேதனை வெளிப்படுத்துவது ஏன்? என்ற கேள்வியும் எழ தொடங்கியிருக்கிறது. ஒருவேளை திமுக கடந்த 2021ஐ போல மீண்டும் பலமாக ஆட்சி அமைத்திருந்தாலோ அல்லது தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகம் என்ற வலுவான மாற்று சக்தி உருவாகாமல் இருந்திருந்தாலோ வைகோ திமுக கூட்டணியை விட்டு வெளியேறியிருக்க மாட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

பொன்னான வாய்ப்பு
நம்மை விட்டால், இந்த சிறிய இயக்கங்கள் எங்கே சென்றுவிட போகிறார்கள்? என்று திமுகவின் பெரியண்ணன் மனப்பான்மை தான் இப்போதைய அரசியல் மாற்றத்திற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. தற்போது, தவெக பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் நீண்ட நாட்களாக அதிருப்தியில் இருந்த கட்சிகளுக்கு தங்களது பாதையை மாற்றி கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் மதிமுகவும் விதிவிலக்கல்ல.
தவெக டில்லி குரலாக வைகோ
திமுகவிற்காக மட்டுமே வாழ்நாளெல்லாம் குரல் கொடுப்பேன் என்று சொன்ன வைகோ, தேர்தல் வெற்றிக்கு பிறகு சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்திற்கு நேரில் வந்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜயை நெகிழ்ச்சியோடு தழுவி கொண்டார். அன்று முதல் இன்று வரை செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய்.. விஜய்... என தவெகவின் பிரதான குரலாகவே வைகோ ஒலிக்க தொடங்கியிருக்கிறார். விசாரித்ததில், நாடாளுமன்றத்தில் தமிழக வெற்றி கழக அரசின் டெல்லி குரலாக வைகோ விரைவில் ஒலிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக முகமாக...
உதயசூரியன் நிழலில் இருந்து முழுமையாக வெளிவந்து, தமிழக வெற்றி கழகத்தின் டெல்லியின் முகமாக வைகோ மாறப்போகும் இந்த புதிய அரசியல் அத்தியாயம், தமிழகத்தில் எத்தகைய திருப்பங்களை ஏற்படுத்த போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.