Also Watch
Read this
கடந்த திமுக ஆட்சியில், பள்ளி தொடங்குவதற்கு பல லட்சங்கள் லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாக அடுத்தடுத்து எழும் குற்றச்சாட்டு தான் தமிழக அரசியலில் தற்போது பூகம்பமாக வெடித்துள்ளது.

பிரபலத்தின் பதிவு
பிரபல மென்பொருள் நிறுவனமான Zoho தலைவர் ஸ்ரீதர் வேம்பு, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய நிர்வாக ஊழல்களைக் கடுமையாகச் சாடி தனது சமூக வலை தளப் பக்கத்தில் தொடர் பதிவுகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி, தென்காசி உள்ளிட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசக் கல்வி வழங்கும் தங்களது 'கலைவாணி கல்வி மையம்' பள்ளிக்கு அனுமதி வழங்க, முந்தைய ஆட்சியில் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கப்பட்டதாகவும், தற்போதைய தவெக அரசு அமைந்த பிறகு, எந்தவித லஞ்சமும் இன்றி தானாகவே மிக விரைவாக அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட முறையில் விமர்சனம்
இந்த விவகாரத்தை முன்வைத்து, திமுகவினர் தன்னைத் தனிப்பட்ட முறையில் இழிவாக விமர்சித்து வருவதாக தெரிவித்த அவர், "திமுகவினர் போன்று நான் வம்சாவழிப் பணக்காரர் இல்லை. தமிழ்வழிப் பள்ளியில் படித்து எவ்விதப் பின்னணியும் இல்லாமல் உழைப்பால் உயர்ந்தவன்.

நான் மரணத்திற்கும் அஞ்சாதவன், பின் ஏன் திமுகவின் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு அஞ்ச வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுகவினருக்குச் சிறிதளவாவது மனசாட்சி இருந்தால் அவர்கள் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கலாம் என்றும், திருக்குறள் 423ஐ சுட்டிக்காட்டி "மெய்ப்பொருள் காண்பதே அறிவு" என்றும் சாடியுள்ளார்.

தொடரும் பதிவுகள்...
ஸ்ரீதர் வேம்புவின் இப்பதிவைத் தொடர்ந்து, விநீதா கோவிந்தசாமி உள்ளிட்ட பல CBSE பள்ளித் தாளாளர்களும் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தாங்கள் அணுஅணுவாக அனுபவித்த ஊழல் கொடுமைகளையும் மன உளைச்சல்களையும் சமூக வலைதளங்களில் தைரியமாகப் பகிர்ந்து வரத் தொடங்கியுள்ளனர். "நாம் அவர்களை வாக்களித்து வெளியேற்றி விட்டோம், இனி உண்மைகளைப் பேசுவோம்," என்று ஸ்ரீதர் வேம்பு இதற்கும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.