Also Watch
Read this
By: Web Team

புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில், ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். உலக புகழ்பெற்ற இந்த திருவிழா மைசூருக்கு அடுத்ததாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. காலை 6 மணிக்கு கோயில் கொடிமரத்தில் தசரா விழாவுக்கான கொடியேற்றம் தொடங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து, கையில் காப்பு அணிந்து கொள்ளும் பக்தர்கள் விரதம் இருந்து, அம்மனை வழிபட தொடங்கினர்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் தசரா விழாவில் தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகங்களும், இரவு 10 மணிக்கு அம்மன் வீதி உலாவும் நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கையாகவும், 2ஆம் நாள் கற்பக விருட்சத்தில் விசுவகர்மேசுவரர் கோலத்திலும், 3ஆவது நாளில் ரிஷப வாகனத்தில் பார்வதியாகவும், 4ஆவது நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியராகவும், 5ஆவது நாளில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணராகவும், 6ஆவது நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினியாகவும், 7ஆவது நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜராகவும், 8ஆவது நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமியாகவும், 9ஆவது நாளில் அன்ன வாகனத்தில் கலைமகளாகவும் அம்மன் அருள்பாலிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, காலை 11 மணிக்கு காளி பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிகளும், இரவு 7 மணிக்கு வில்லிசை நிகழ்வும் நடைபெறுகிறது.