செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உயரதிகாரிகள் விடுப்பு தராமல் மருத்துவ சான்றிதழை திருப்பி அனுப்பியதோடு, ஊதியத்தையும் நிறுத்தி வைத்ததாக கூறி, போக்குவரத்து துறை ஊழியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், ஆதனூரை சேர்ந்தவர் யுவராஜ். 52 வயதான இவர் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தாம்பரம் பணிமனையில் இளநிலை பொறியாளராக இருந்து வந்தார். முன்னதாக, மந்தைவெளி டிப்போவில் வேலை செய்துவந்த யுவராஜ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் டிரான்ஸ்ஃபர் வாங்கி கொண்டு தாம்பரத்தில் பணி செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் யுவராஜ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரை மட்டுமல்லாது அவரது சக ஊழியர்களிடமும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. தனது தற்கொலைக்கு காரணமாக உயரதிகாரிகள் இருவரது பெயரையும் குறிப்பிட்டு யுவராஜ் அனுப்பியிருக்கும் குறுஞ்செய்தி, பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் கழுத்து வலி காரணமாக யுவராஜ் பணிக்கு செல்லவில்லை என சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக தனது மேலதிகாரியான உதவி பொறியாளர் கோவிந்தராஜின் வாயிலாக பணிமனை கிளை மேலாளருக்கு மருத்துவ சான்றிதழை இணைத்து தொடர் விடுப்பு கோரியதாக தெரிகிறது. ஆனால், கோவிந்தராஜன் விடுப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது.விடுப்பு கிடைக்காத மனவேதனையில் ஆழ்ந்த யுவராஜ், இறுதி முயற்சியாக மனித வள மேம்பாட்டு அதிகாரியான ஸ்வர்ணலதாவுக்கும் மெயில் அனுப்பியிருக்கிறார். ஆனால், கோவிந்தராஜின் தலையீட்டால் அவரும் அந்த கோரிக்கையை நிராகரித்ததோடு, யுவராஜ் முன்னறிவிப்பின்றி வேலைக்கு வராமல் விடுப்பு எடுத்ததாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.இதன் காரணமாக, யுவராஜ் மீண்டும் பணிக்கு வர முடியாத அளவுக்கு 11 C எனப்படும் நடைமுறையை பின்பற்றியதோடு, ஊதியத்தையும் நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது.தன் மீதான நடவடிக்கையால் விரக்தியின் உச்சத்துக்கே சென்ற யுவராஜ், மூன்று மாதங்களாக ஊதியமின்றி குடும்பத்தை நடத்த முடியாமல் திணறியிருக்கிறார். ஒருகட்டத்தில் உயிருக்கு உயிராய் நேசித்த வேலையையே வெறுத்த யுவராஜ், வேலை தொடர்பாக வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு, மறைமலை நகர் ரயில் நிலையத்துக்கு அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. யுவராஜ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, தன் சாவுக்கு இவர்கள் தான் காரணம் என கோவிந்தராஜ் மற்றும் ஸ்வர்ணலதாவின் பெயரை குறிப்பிட்டும் நடந்தவற்றை விளக்கியும் டிஜிபிக்கு மெயில் அனுப்பியதோடு, சக ஊழியர்களுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜையும் அனுப்பியுள்ளார்.தன் மறைவுக்கு பிறகு வரும் பணப்பலன்களை தனது குடும்பத்தினருக்கு பெற்றுத் தருமாறு யுவராஜ் உருக்கமாக பதிவிட்டுள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பதற்றத்தை உண்டாக்கியிருக்கும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக புகாருக்குள்ளான கோவிந்தராஜ் மற்றும் ஸ்வர்ணலதாவை நம் செய்தியாளர் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்க மறுத்துள்ளனர். யுவராஜின் குற்றச்சாட்டுகளை எளிதாக கடந்து செல்லாமல் தீர விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.