Also Watch
Read this
By: Web Team

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்திற்காக, வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, கடந்த 2 மாதங்களுக்கு முன் முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில், அணையில் நீர் இருப்பு அதிகமாக உள்ளதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு, தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை ஏற்று, வைகை அணையில் இருந்து, இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிகழ்வில், அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பாசனத்திற்கு நீரை திறந்து வைத்தார்.

வினாடிக்கு 1,130 கன அடி வீதம், வைகை அணையின் பிரதான ஏழு மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்டது.
இதனால், பெரியார் பாசனப் பகுதிகளில் உள்ள 85,563 ஏக்கர் ஒரு போக பாசன நிலங்கள், திருமங்கலம் பிரதான பாசன கால்வாய் பகுதிகளில் உள்ள 19,439 ஏக்கர் நிலங்கள் என மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் மொத்தமாக 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது மக்கள் யாரும் பாசன கால்வாயில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved