Also Watch
Read this
திமுக கூட்டணியின் நலன்களை பாதிக்கும் வகையில் பரப்பப்பட்ட வதந்திகளின் காரணமாக, போட்டியிலிருந்து பின்வாங்கியதாக திருமாவளவன் விளக்கம் அளித்து உள்ளார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக இருப்பதற்கு விசிகவுக்கு பங்கு இருப்பதாகவும், அதனை சிதறடிக்க செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
புதுச்சேரியில் திருமாவளவன்
இதுதொடர்பாக, திருமாவளவன் கூறியதாவது;
புதுச்சேரியில், தேர்தலுக்கு முன்பு தொகுதிப் பங்கீடு குறித்து பேச கால அவகாசம் இல்லாததால் 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தோம். காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக, 3 தொகுதிகளில் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டோம். உழவர்கரை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம். மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பணியாற்றுவோம். காங்கிரஸ் அளித்த வாக்குறுதிப்படி உழவர்கரை தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளருக்கு பணியாற்றும் என நம்புகிறோம். புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்தில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன். தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. தமிழக முதல்வரின் பல்வேறு திட்டங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரூ.8,000 கூப்பன்
முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியாக குடும்பத்திற்கு ரூ.8,000 கூப்பன் வழங்குவதாக அறிவித்தது, வெற்றிக்கு கை கொடுக்கும் என நம்புகிறோம். தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடம் தருவதில்லை என மக்கள் உறுதியுடன் உள்ளனர். இதை எதிரொலிக்கும் வகையில் தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் அடங்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

இடதுசாரிகள் வராதது வருத்தம்
புதுச்சேரி கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இடம்பெறாதது வருத்தம் தருகிறது. அவர்களுக்கும் இடங்களை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உரிய இடங்களை வழங்க முடியவில்லை. அவர்கள் போட்டியிடாதது கூட்டணி வெற்றியை பாதிக்காது. அவர்களும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு உதவுவார்கள் என நம்புகிறோம். பாஜக தேர்தல் அறிக்கையில், புதுச்சேரியின் லச்சினையை மாற்றப் போவதாக கூறியுள்ளது. இது புதுச்சேரியின் சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் முயற்சி. புதுச்சேரி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

காட்டுமன்னார்கோவிலில் போட்டி
நாடாளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை நடக்கிறது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதனால் அடித்தட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க காட்டுமன்னார்கோவில் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டேன். ஆனால், எதிர்கட்சிகள் சில வதந்திகளை பரப்பியதால் அந்த முடிவை கைவிட்டு வேட்பாளரை அறிவித்தேன். ஆனால், அந்த வேட்பாளர் தனி தொகுதியில் போட்டியிட முடியாது என்பதால் வேட்பாளரை மாற்றியுள்ளேன். இதில் வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை. சமூகநீதியை காக்க மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கவே தற்போதைய எம்எல்ஏக்கள் 3 பேருக்கு பதிலாக வேறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அறம் வாய்ந்த செயல் அல்ல
மறைந்த தலைவர் கருணாநிதி இறுதி காலத்தில் சிறை வைக்கப்பட்டார் என இபிஎஸ் பேசியது அறம் வாய்ந்த செயல் அல்ல. கருணாநிதியை ஸ்டாலின் எவ்வாறு பார்த்துக் கொண்டார்? என உலகுக்கே தெரியும். பாஜகவின் சித்துவேலைகள் தமிழகம், புதுச்சேரி தேர்தலில் எடுபடாது. தமிழகம், புதுச்சேரியில் மதச்சார்பு அரசியலுக்கு இடமில்லை. இதை வரும் தேர்தலில் மக்கள் உறுதிபடுத்துவார்கள்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved