Also Watch
Read this
முருகப்பெருமான் வடமாநிலத்தில் பிறந்தவர் என்பது போன்று சித்தரிக்கும் கதையமைப்பை கொண்ட ஜூனியர் என்.டி.ஆரின் புதிய திரைப்படத்துக்கு தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

சீண்டலில் புதிய திரைப்படம்
தமிழ்க்கடவுள் முருகன் வடநாட்டில் பிறந்ததாக கூறி, ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளையும் சீண்டியிருக்கிறது என்.டி.ஆரின் புதிய திரைப்படம். முருகப்பெருமானை மையப்படுத்தி உருவாகும் புதிய திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கிறார்.

பெயர் சூட்டப்படாத இந்த படத்தினை திரிவிக்ரம் இயக்குகிறார். இதனிடையே, படத்தின் அறிவிப்பு குறித்து படத்தின் தயாரிப்பாளரான நாக வம்சி வெளியிட்ட பதிவுதான் பூதாகரத்தை கிளப்பியிருக்கிறது. "வடக்கில் பிறந்து, தெற்கில் போற்றப்படும் கடவுள்" என முருகனை குறிப்பிட்டிருக்கும் அவரது இந்த வாசகம் தான் விவாதத்தை சூடேற்றியிருக்கிறது.

கடவுள் என்பதையும் தாண்டி...
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடியான நம் தமிழ்க் குடியின் கடவுளாக போற்றப்படுபவர் முருகப்பெருமான். வெறும் சமய நம்பிக்கையாக மட்டுமல்லாமல், தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவனாகவும் முருகன் போற்றப்படுகிறார். கடவுள் என்பதை தாண்டி அவர் தமிழர்களின் முன்னோராகவும் புகழப்படுகிறார்.

தொல்காப்பியத்தில் குறிஞ்சி நிலத் தலைவனாகவும், அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகிய சங்க இலக்கியங்களில் சேயோன், செவ்வேள், நெடுவேள் போன்ற பெயர்களாலும் முருகப்பெருமானை புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதைவிட மேலாக, முருகனுக்காகவே நக்கீரர் திருமுருகாற்றுப்படை என்ற அற்புதமான படைப்பையும் உருவாக்கியிருக்கிறார். பரிபாடலும் முருகனை போற்றி புகழுகின்றது.

உயிரோடும் உணர்வோடும்...
’குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே, தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளும் குன்றில் தான் அமைந்திருக்கின்றன. இப்படி, தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் இரண்டற கலந்தது தான் முருக வழிபாடு. இத்தகைய வரலாற்று பிணைப்பை மாற்றி முருகப் பெருமான் வடக்கில் பிறந்ததை போல் வரலாற்றை தவறாக திரித்து கட்டமைக்க முயல்வது தமிழர்களின் உணர்வுகளை சீண்டியிருக்கிறது.

அபகரிக்க துடிப்பதா?
இதுதொடர்பாக கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வணிக நோக்கத்திற்காக அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக் கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராதவர்கள், தமிழ் பண்பாட்டு விழுமியங்களை அபகரிக்க துடிப்பதாக விமர்சித்துள்ளார். தமிழ்ப்பண்பாட்டைத் திரித்து, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாகி இப்படம் வெளிவந்தால் கடும் எதிர்வினைகளை சந்திக்கும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எச்சரிக்கையாக இருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved