Also Watch
Read this
தமிழகத்தில் மொத்தமுள்ள 20 பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாத சூழலில், காலிப்பணியிடங்களை நிரப்புவது, நிதியை பெறுவது, சம்பளம் வழங்குவது, பதவி உயர்வு அளிப்பது போன்ற மொத்த பணிகளும் முடங்கி, மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? இதற்கு தீர்வு என்ன?

துணைவேந்தர் இன்றி...
தமிழ்நாட்டில் மாநில அரசின் கீழ் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் இயங்கி வரும் நிலையில், இதில் 15 பல்கலைக் கழகங்கள் துணை வேந்தர்கள் இல்லாமல் தள்ளாடி வருகின்றன. சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்,

வேளாண் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம், திறந்தநிலைப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், விளையாட்டுப் பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியன நிர்வாகத்தில் தள்ளாடி வருகின்றன.

கல்லூரிகளில் முதல்வரும் இல்லை
இது தவிர, மொத்தமுள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 105 கல்லூரிகள் முதல்வர் இல்லாமல் இயங்கி வருகின்றன. அதோடு, 8 ஆயிரத்து 500 பேராசிரியர்களுக்கான பணியிடங்களும் நிரப்பப்படமால் இருந்து வருகின்றன. துணை வேந்தர்கள் இல்லாமல் பல்கலைக்கழகங்களும், முதல்வர்கள் இல்லாமல் கல்லூரிகளும் நிர்வாக ரீதியிலான பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாததால் கொள்கை ரீதியாக இருந்தாலும் சரி, நிர்வாக ரீதியிலும் சரி எந்த முக்கிய முடிவும் எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது.

உரிய நிதி பெற முடியாமல்...
குறிப்பாக, முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்கள் தான் துணைவேந்தர்கள் இல்லாமல் கடும் அவதிக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த மாணவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு துணைவேந்தரின் கையெழுத்து அவசியம் என்பதால், அவர்களின் ஆராய்ச்சி அடுத்தகட்டத்தை நோக்கி செல்லமுடியாமல் தேங்கி நிற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அதோடு, துணை வேந்தர்கள் இருந்தால் தான் பல்கலைக்கழக மானியக் குழுவில் கோரிக்கை வைத்து தேவையான நிதியை பெற முடியும் என்ற நிலையில், உரிய நிதியை பெற முடியாமல் அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிகார மோதல்...
தேர்வு நடத்துவதற்கு ஒப்புதல், பட்டமளிப்பு விழா நடத்துவதில் தாமதம் ஏற்படுவதோடு, முக்கிய முடிவுகளை எடுப்பது யார்? என போட்டி ஏற்பட்டு, பல்கலைக்கழக நிர்வாகமே குளறுபடிக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், துணை வேந்தர்கள் இல்லாததால் புதிய நியமனங்கள், பதவி உயர்வு அளிக்க முடியாத சூழல் ஏற்படுவதோடு, காலி பணியிடங்களை நிரப்பவும் முடியாமல் போய் விடுகிறது. இதே நிலைதான், கல்லூரிகளுக்கும். இந்த பெரும் அவலத்திற்கு மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான அதிகார மோதல் தான் காரணம் என தெரியவருகிறது.

காத்திருக்கும் மாணவர்கள்...
அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு துணைவேந்தர்கள் நியமனத்திற்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் வழக்கத்திற்கு மாறாக, யுஜிசி உறுப்பினர் ஒருவரை சேர்க்க வேண்டும் எனக்கூறி சர்ச்சைக்கு விதை போட்டிருந்தார் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு அந்த குழுவை ஏற்க மறுத்தது.

ஆனால், தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்ப்பது உச்சநீதிமன்ற உத்தரவு என ஆளுநர் தரப்பு, விடாப்பிடியாக இருந்ததால் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியது. இதுதொடர்பான வழக்குகளும் இன்னும் விசாரணையில் என்ற அளவில் தான் உள்ளன.

கடந்த ஆட்சியில் ஏற்பட்ட அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான அதிகார மோதல், புதிய ஆட்சியில் தீர்வுக்கு வருமா? ஆளுநரும் அரசும் இணைந்து பேசி ஒரு முடிவுக்கு வருவார்களா? என்ற எதிர்ப்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.