Also Watch
Read this
By: Manigandan Raja
கறிக்கோழி விவசாயிகள் விவகாரம் குறித்து, அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், “பதில் தயாரானதும், விவாதிக்கலாம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதால், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அசைவ பிரியர்கள் அதிர்ச்சி
கடந்த சில நாட்களாகவே, கோழி இறைச்சியின் விலை பல மடங்கு உயர்ந்து இருப்பதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.200 என்ற விலையில் இருந்து வந்தது. தற்போது, பல மடங்கு அதிகரித்து சுமார் ரூ.380 வரை விலையேற்றம் கண்டது. கோழி தீவனத்தின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலையேற்றம் என வியாபாரிகள் கூறி வருகின்றனர்.

சட்டப்பேரவையில் கறிக்கோழி விவகாரம்
இந்நிலையில், சட்டப்பேரவையில், இந்த கறிக்கோழி விவகாரம் தொடர்பாக அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. பின்னர், இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுக்க வலியுறுத்தி, சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், அதிமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததால், எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “கறிக்கோழி விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்து, பதில் கிடைத்த பிறகு, நாளை விவாதிக்கலாம். இப்போது நேரத்தை வீணடிக்க வேண்டாம்,” என்று கேட்டுக் கொண்டார்.
அதிமுகவினர் தொடர்ந்து அமளி
இருந்த போதும், அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
விவசாயிகளின் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், வெளிநடப்பு செய்தோம். 6 மாதங்களாக, விவசாயிகள் போராடி வருகின்றனர். இன்னும் 2 நாட்கள் தான் இருக்கிறது. இது, 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னை, அரசு அக்கறை எடுத்து, அதற்குரிய பதில் கொடுப்பதற்கு என்ன? பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியும். முந்தைய காலங்களிலும் இது நடந்துள்ளது. அதிமுக ஆட்சியில் கூட பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, நிறைய கேள்விகளை எழுப்பினார்கள், நாங்கள் அதற்கான பதிலை கொடுத்தோம். ஆனால், இன்றைய தினம் இந்த அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு, பிரதான எதிர்க்கட்சி தலைவர் பேசக் கூடாது என்ற நிலைப்பாட்டினால், அனுமதி மறுக்கப்பட்டது.
அரசு பின்வாங்குவது ஏன்?
போராட்டம் நடத்துவது அரசுக்கு தெரியாதா? அப்படி தெரியவில்லை எனில் மோசமான அரசு என்று பொருள். 6 மாதங்களாக விவசாயிகள் தங்களின் உரிமைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகிறார்கள், 2 முறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, நடத்தவில்லை. அரசு பின்வாங்குவது ஏன்? இது அரசுக்கும், துறை அமைச்சருக்கும் தெரியவில்லை என்றால், இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டியது என்று, மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இந்த அரசு, விவசாயிகள் பக்கம் இல்லை. முதலாளிகள் பக்கம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது. 40 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பிரச்னையை அவையில் அரசின் கவனத்திற்கு கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டால், அவையில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது அதிமுக
2021 சட்டசபை பொதுத்தேர்தலின் போது முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது அதிமுக தான். அதன்பிறகு ஒரு மணிநேரம் கழித்து தான் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள். அமைச்சர்கள் எல்லாம் வேண்டுமென்றே தவறான தகவலை வெளியிட்டு வருகிறார்கள். மகளிர் குல விளக்கு திட்டம் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவித்தோம். மகளிருக்கு பேருந்து பயணச்சலுகை உள்ளிட்டவை ஏற்கனவே அறிவித்த திட்டம் தான். தோல்வி பயத்தால் தான், அதிமுக கொண்டு வந்ததால் நிறுத்தி வைக்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை, திமுக அரசு மீண்டும் கொண்டு வந்துள்ளது.
சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது
தமிழகத்தில், திமுக எப்போது ஆட்சிக்கு வந்ததோ, அப்போதில் இருந்து சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. 2026ம் ஆண்டு துவங்கிய இந்த 20 நாட்களில் 46 போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 27 நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. நிரந்தரமாக சட்டம், ஒழுங்கு டிஜிபியை நியமிக்காததே இதற்கு முக்கியக் காரணம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved