Also Watch
Read this
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து, நாள்தோறும் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக டெல்லிக்கு சென்றுள்ள அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் வரை மட்டுமே நடந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதலமைச்சர் முன் வைத்துள்ளார்.

டெல்லி சென்ற முதல்வர்
அதிமுகவில் பிரிந்த அணிகள் இணைப்பு, எதிர்க்கட்சிகளின் குதிரைபேர குற்றச்சாட்டு என பரபரக்கும் தமிழ்நாடு அரசியல் சூழலுக்கு மத்தியில் இரண்டு நாள்கள் பயணமாக தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைநகர் டெல்லி சென்றடைந்தார். தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமருடன் சந்திப்பு
அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த முதலமைச்சர் விஜய், மாலை சுமார் 4.30 மணியளவில் பிரதமரின் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த சந்திப்பின்போது, நெதர்லாந்து நாட்டு பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்காக, பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் நான்கு முக்கிய கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் மாநில வாழ்த்துப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் குறிப்பாணை காரணமாக சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடல் முதலாவதாக பாடப்படுவதாகவும், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலை பாடுவதற்கு உரிய தெளிவுரையை வழங்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வான்வழி அமைப்பு மையம்
மேலும், மேம்பட்ட நடுத்தர போர் விமான வடிவமைப்பு, மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை தமிழ்நாட்டில் அமைக்குமாறும் பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

மேகதாது விவகாரம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான பூமி பூஜை நடத்த உள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் அறிவித்துள்ளது, தமிழக விவசாயிகளிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய விஜய், கர்நாடக அரசின் அறிவிப்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முரணானது என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்கள் கைது விவகாரம்
இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் அதிகரித்து உள்ளதாகவும் பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் கவலை தெரிவித்தார். நடப்பு ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடந்துள்ளதை எடுத்துக்கூறிய விஜய், இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 266 படகுகளையும் உடனடியாக விடுவிக்கும்படி அந்நாட்டு அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நிதி அமைச்சருடன் சந்திப்பு
பிரதமர் உடனான சந்திப்பை நிறைவு செய்த முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டிற்கான நிதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், ஒசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.