Also Watch
Read this
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி, சிறையில் இருந்த ஜாபர் சாதிக் சம்பந்தப்பட்ட இடங்களில் மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டது பரபரப்பை கிளப்பியது. போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கிற்கு விரிக்கப்பட்ட வலையில், இயக்குநர் அமீருக்கும் குறி வைத்திருக்கும் நிலையில், திடீர் ரெய்டின் திடுக்கிடும் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த வழக்கு
தேர்தல் நேரம் என்றாலே ரெய்டு தடதடப்பது வழக்கம் தான் என்றாலும், போதைப் பொருள் கடத்தல் வழக்கின் முக்கிய புள்ளியான ஜாஃபர் சாதிக்கை குறி வைத்து ரெய்டு நடத்தப்பட்டது திடீர் டுவிஸ்ட்டாக உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த வழக்கு என்றால், ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வழக்கு. 2024ஆம் ஆண்டு டெல்லியில் 75 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது. இந்த வழக்கு விசாரணையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக, தமிழ்நாட்டை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் இயங்கி வந்தது தெரியவந்தது.

ரூ.2,000 கோடியா...?
ஆஸ்திரேலியா, நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சூடோபெட்ரின் போதைப் பொருளை ஜாபர் சாதிக் கடத்தியதும் தெரியவந்தது. போதைப் பொருள் நெட்வொர்க்கின் முக்கிய புள்ளியாக, மூளையாக, DRUG MAFIA பொருள் சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்டு கொண்டிருந்த ஜாபர் சாதிக்கை ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்த NCB, போதைப் பொருள் விற்று கிடைக்கும் பணத்தை சினிமாவிலும், ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்ததை கண்டுபிடித்தது.

இறைவன் மிகப்பெரியவன்...
அந்த வகையில், ஜாபர் சாதிக் சகோதரர் மைதீன்கானை வைத்து இயக்குநர் அமீர் இயக்கிய இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படம், போதைப் பொருள் விற்பனை பணத்தில் எடுக்கப்பட்டது தெரியவர, அமீருக்கு சம்மன் அனுப்பி டெல்லி வரவழைத்து 11 மணி நேரத்திற்கும் மேலாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதோடு, ஜூகோ ஓவர்சீஸ் லிமிடெட் என்ற பெயரில் உலர்ந்த பழங்கள் ஏற்றுமதி நிறுவனத்தில் ஜாபர் சாதிக் - அமீர் இடையே தொழில் ரீதியான தொடர்பு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சுமார் 3.3 கோடி ரூபாய் அளவுக்கு ஜாபர் சாதிக் - அமீர் இடையே பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி, அமலாக்கத் துறையும் கையிலெடுத்து ஜாபர் சாதிக், அமீரை ரெய்டு வளையத்தில் வைத்து ஆட்டிப்படைத்தது.

மூன்று விசாரணை அமைப்புகள்
போதைப் பொருள் வழக்கில் பல மாதங்கள் சிறையில் இருந்த ஜாஃபர் சாதிக், தற்போது ஜாமினில் வெளியே வந்த நிலையில், திடீரென ஜாபர் சாதிக்கை குறி வைத்து ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. அதுவும், வருமானவரித்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, தேர்தல் பறக்கும் படை என ஒரே நேரத்தில் மூன்று விசாரணை அமைப்புகள் ஜாபர் சாதிக் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தியுள்ளன. எழும்பூர் பகுதியில் உள்ள ஜே.எஸ்.எம் விடுதி, அண்ணா சாலையில் அமைந்துள்ள விடுதி மற்றும் எத்திராஜ் கல்லூரிக்கு அருகில் உள்ள ஜே.எஸ் .எம் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், பட்டினப்பாக்கத்திலுள்ள ஜாபர் சாதிக் இல்லம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை நடத்தினர். அந்த வரிசையில் ஜாபர் சாதிக்கிற்கு நெருக்கமான திரைப்பட இயக்குநர் அமீரின் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் சென்ற அதிகாரிகள், அமீர் படப்பிடிப்பில் இருந்ததால் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

மாயவலை
சென்னையில் மட்டுமல்லாமல் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் வீட்டிலும் வருமான வரித்துறையும், தேர்தல் பறக்கும் படையும் சல்லடை போட்டு சலித்துள்ளது. ராஜேந்திரனின் முத்தியால்பேட்டை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் இணைந்து மாயவலை என்ற படத்தை ராஜேந்திரன் தயாரித்த நிலையில், இந்த தொடர்பை சந்தேகித்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. திடீர் சோதனைக்கான காரணம் குறித்து விசாரித்த போது, தேர்தலுக்காக பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக டெல்லியில் இருந்து வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக சொல்கிறார்கள்.

விரைவில் தெரிய வரும்
இந்த சோதனையில், போதைப் பொருள் விற்பனை மூலமாக சம்பாதித்த பணத்தை தேர்தலுக்காக செலவிட்டு இருப்பது தெரியவந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சி தகவல் கூறப்படுகிறது. ஏற்கனவே, போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணம், பல தொழில்களில் முதலீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது தேர்தலுக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்ற தகவல் அதிர வைக்கிறது. அதோடு, யாருடைய தேர்தல் செலவுக்காக போதைப் பொருள் விற்பனை பணம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், முக்கிய அரசியல் கட்சியின் நிர்வாகியாக இருந்த நிலையில், வழக்கில் கைதானதும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அப்படி இருக்கையில், எந்த கட்சிக்காக, எந்த வேட்பாளருக்காக போதைப் பொருள் விற்பனை பணம் செலவிடப்பட்டது என வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. போதைப் பொருள் விற்பனை பணத்தை தேர்தல் நேரத்தில் புழக்கத்தில் விடுவதின் பின்னணியை அலசி ஆராய்ந்து வரும் வருமான வரித்துறை, விரைவில் முழு வரலாறையும் தோண்டி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved