news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கு, சாட்டையை சுழற்றிய நீதிபதி
tv

Also Watch

tv

Read this

சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கு, சாட்டையை சுழற்றிய நீதிபதி

''9 போலீசுக்கும் டபுள் மரண தண்டனை''

20

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சாத்தான்குளம் போலீஸ் கஸ்டடியில் தந்தை - மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையாக இரட்டை மரண தண்டனை விதித்து, மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. குடும்பத்தின் ஆணிவேரையே பிடுங்கி பழிவாங்கும் நோக்கத்துடன் மனம் போன போக்கில் தந்தை - மகனை தாக்கியிருப்பதாக நீதிபதி முத்துக்குமரன் வேதனை தெரிவிக்க, காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்ப்பாக சாத்தான்குளம் தீர்ப்பு அமைந்திருக்கிறது. இதுவரை கேள்விப்படாத வகையில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இரட்டை மரண தண்டனை என்றால் என்ன? தீர்ப்பின் பின்னணி என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தமிழ்நாடே எதிர்பார்த்த தீர்ப்பு
தமிழ்நாடே பெரிதும் எதிர்பார்த்த சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வணிகர்களான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை அடித்தே கொன்றது சாத்தான்குளம் காவல்துறை. இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், ஆயிரம் பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்தார். இதன்படி, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முருகன், வெயில்முத்து, சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அரிதிலும் அரிதான வழக்கு
சாத்தான்குளம் வழக்கு அரிதிலும் அரிதான வழக்காக பார்க்கப்படுகிறது என்ற நீதிபதி, காவல் நிலைய மரணம் மிக கொடியது எனவும், காவல் நிலையத்தில் வைத்து இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். முழுக்க முழுக்க பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்ற நீதிபதி, எங்கு அதிகாரம் இருக்கிறதோ, அங்கு பொறுப்பும் அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டார். வழக்கின் தீவிரத்தை வைத்து குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது என கருத்து தெரிவித்த நீதிபதி, சட்டத்தை காப்பாற்ற வேண்டிய நபர்களே, இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

காவல் துறைக்கே களங்கம்
யார் அடித்த காயங்கள் என பிரித்து பார்க்கவே முடியாத அளவுக்கு ஜெயராஜ் உடலிலும், பென்னிக்ஸ் உடலிலும் காயங்கள் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, சம்பவத்தைப் படிக்கும் போதே மனம் பதைபதைக்கிறது என அச்சம் தெரிவித்தார். வழக்கில் தண்டிக்கப்படும் 9 போலீசாரால் ஒட்டு மொத்த காவல் துறைக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது எனவும், அவர்கள் திருந்த வாய்ப்பு கொடுக்கும் எண்ணமே இல்லை எனவும் கூறிய நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் மட்டும் தாமாக முன் வந்து வழக்கை விசாரிக்காமல் இருந்திருந்தால் வழக்கு அடியோடு புதைக்கப்பட்டிருக்கும் என கவலை தெரிவித்தார். நல்ல கல்வி அறிவு கொண்ட போலீசாரே, மூர்க்கத்தனமாக கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என
நீதிபதி வேதனையுடன் தீர்ப்பை வாசித்தார்.

9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை
லாக் அப் மரணம் தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கினால் காவல் துறையினருக்கு அச்சம் இருக்காது என்ற நீதிபதி, தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி ஈவு, இரக்கம் இல்லாமல் மனம் போன போக்கில் மனசாட்சி இல்லாமல் போலீசார் தாக்கியிருப்பதாக வேதனை தெரிவித்தார். ஒரே நேரத்தில், தந்தை, மகன் என குடும்பத்தின் ஆணிவேரே பிடுங்கப்பட்டுள்ளது என்ற நீதிபதி, ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது என்பதால் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பதாக தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு அபராதம்
மேலும், வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆய்வாளர் ஸ்ரீதருக்கும், எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கும் இரண்டு பிரிவுகளின் கீழ் தலா 84 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 52 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தலைமைக் காவலர் முருகனுக்கு 50 லட்சம் ரூபாய் அபராதமும், சாமதுரைக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், தாமஸ் பிரான்சிஸுக்கு 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இரட்டை மரண தண்டனைக்கான விளக்கம்
நீதிபதி குறிப்பிட்டபடி, அரிதினும் அரிதான இந்த வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. இந்திய தண்டனை சட்டங்களை பொருத்தவரையில் ஒவ்வொரு குற்றங்களுக்கும் தனித்தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்ற நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கிலும் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தந்தையை கொன்றதற்காக ஒரு மரண தண்டனையும், மகனை கொன்றதற்காக ஒரு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, நடைமுறையில் ஒரு மனிதருக்கு ஒரு முறை தான் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என்ற நிலையில், இரட்டை மரண தண்டனைக்கான விளக்கம் குறித்து வழக்கறிஞர்கள் விளக்கியுள்ளனர்.

சலுகைக்கு வாய்ப்பே இல்லை
அதாவது, தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உயர் அல்லது உச்சநீதிமன்றத்தை அணுகி மேல் முறையீடு செய்தால், வேறு ஏதாவது காரணத்திற்காக தண்டனை ரத்து செய்யப்படவோ, ஆயுள் தண்டனையாக குறைக்கப்படவோ வாய்ப்பு இருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் ஒரு தண்டனையை தான் ரத்து செய்யவோ, குறைக்கவோ முடியும் என்ற நிலையில், மற்றொரு மரண தண்டனை அமலில் இருக்கும். இதன் மூலம் மேல் நீதிமன்றத்திலும் குற்றவாளிகளுக்கு சலுகை கிடைக்க முடியாதபடி செய்திருக்கிறது மதுரை மாவட்ட நீதிமன்றம்.

வரலாற்று தீர்ப்பு வழங்கிய பெருமை
தீர்ப்பின் சாராம்சத்தை வாசித்து முடித்த நீதிபதி முத்துக்குமரன், பேனா நுனியை முறித்தது கவனிக்க வைத்தது. சுமார் 5 ஆண்டுகளாக சாத்தான்குளம் வழக்கின் விசாரணையை கவனித்து கடைசியாக அதிகாரத்தை வைத்து ஆட்டம் போட நினைக்கும் சில காவல்துறையினருக்கு பாடம் புகட்டும் வரலாற்று தீர்ப்பை வழங்கிய பெருமை நீதிபதி முத்துக்குமரனை சேர்ந்திருக்கிறது.


Related Link
ஈரான் இஸ்ரேல் போர்

ஈரான் இஸ்ரேல் போர்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இதுக்கு பேரு என்ன? ஏமாத்துறது இல்லையா? இபிஎஸ் vs பிரேமலதா

2
8 mins agoshare
பிரேமலதா விமர்சனம் இபிஎஸ் விளக்கம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved