Also Watch
Read this
மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது குறித்து, முதலமைச்சர் யாருடைய கருத்தையும் கேட்கவில்லை என, இபிஎஸ் குற்றம் சாட்டி உள்ளார். திருத்தத்தை வாக்கெடுப்புக்கு விடாமல், திருத்தப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றியது பேரவை விதிமீறல் என்றும் கூறி உள்ளார். மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான திருத்தப்பட்ட தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கவில்லை என்றும், என்ன நோக்கத்திற்காக மீண்டும் நடுவர் நீதிமன்றம் கேட்கின்றனர்? என தவெக மற்றும் திமுகவுக்கு கேள்வியும் எழுப்பி உள்ளார்.

அதிமுக வெளிநடப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து இன்று ஜூன் 22ஆம் தேதி, வெளிநடப்பில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;
சட்டப்பேரவை விதி 220ன் கீழ், அதிமுக சார்பாக ஒரு உரிமை பிரச்சினையை அவைக்கு கொண்டுவர அனுமதி கேட்டோம். மேகதாது தனித் தீர்மானத்தில் இடைச் செருகல் திருத்தம் செய்ததை, கவனத்துக்கு கொண்டுவருவது தொடர்பாக, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தோம். சபாநாயகர் ஜீரோ ஹவரில் இதுபற்றி பேச அனுமதிக்காத காரணத்தால், நாங்கள் வெளிநடப்பு செய்து உள்ளோம்.

திருத்திய தீர்மானம்...
மேகதாது விவகாரத்தில் ஜூன் 18ஆம் தேதி, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வரைவு தீர்மானத்தை மட்டும் அதிமுக சார்பில் ஆதரித்தோம். ஜூன் 19ஆம் தேதி சட்டப்பேரவை விதி 104ன் படி முன்மொழியப் படாத, இடைச்செருகல் சேர்க்கப்பட்ட திருத்திய தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. பேரவை விதி 104ன் கீழ் உறுப்பினர்களுக்கு அனுப்பிய வரைவு தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டுமானால், அரசின் சார்பான திருத்தம் முறையாக அவைக்கு தெரிவிக்கப்பட்டு வரைவில் உள்ள தீர்மானத்துக்கு பதிலாக திருத்தப்பட்ட தனித் தீர்மானத்தை மொழிவதற்கு சபாநாயகரின் அனுமதி பெற்று, திருத்தப்பட்ட தீர்மானத்தை பேரவையில் முன்மொழிய வேண்டும்.

உரிமை மீறல்...
இதனையே சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்சினையாகக் கொண்டு வந்தோம். விதிகளுக்கு புறம்பாக திருத்தத்தை முதல்வரின் பதில் உரையில் சேர்த்து உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு தனித் தீர்மானம் ஜூன் 18ஆம் தேதி, எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. அதன்பின்னர் விவாதம் நடைபெற்றது. பிறகு முதல்வரின் பதிலுரையில் இந்த இடைச்செருகல் திருத்தத்தை சேர்த்து உள்ளனர். விதிகளின்படி இந்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை என்பதை தெரிவிக்கவே, உரிமை மீறல் பிரச்சினையை, அதிமுக கொண்டு வந்தது. அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்பதால் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஏன் நடுவர் மன்றம்?
காவிரி நதி நீர் என்பது தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. ஏற்கெனவே நடுவர் மன்றம் ஒரு நிலையான தீர்ப்பை வழங்கி விட்டது. அப்படி இருக்கும்போது, மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என எந்த நோக்கத்துக்காக கேட்கின்றனர். தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றமும் தெளிவான தீர்ப்பு வழங்கி உள்ளது.

உச்சநீதிமன்றம் தெளிவு
கீழ்ப்படுகை மாநிலங்களின் அனுமதி இன்றி, மேல் படுகை மாநிலம் காவிரி நீரை தடுக்கவோ, தேக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என உச்ச நீதிமன்றம், தெளிவாக கூறி உள்ளது. மீண்டும் நடுவர் மன்றம் கேட்கும் தீர்மானத்தை ஏன் கொண்டு வந்தனர்? என்று கேள்வி எழுப்புகிறோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved