Also Watch
Read this
அம்மோனியா கசிவு விவகாரம் தொடர்பாக, 110 விதியின் கீழ் விளக்கமளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ், இனி வரும் காலங்களில் இத்தகைய விபத்து நேராமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

110 விதியின் கீழ் அறிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்த வாயு கசிவு சம்பவம் தொடர்பாக 110 விதியின் கீழ், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் அனுமதி கேட்டு, சட்டப்பேரவையில் பேசினார்.
அமைச்சர் பர்வேஸ் பேசியாதவது;
திருவள்ளூர் மாவட்டத்தில், அமோனியா வாயு கசிவால் 70 பெண்கள், 4 ஆண்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 36 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 27 பேர் சாதாரண சிகிச்சையில் உள்ளனர். இதில் 5 பெண்கள் உயிரிழந்து உள்ளனர்.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதி
தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு முதல்வர் விஜய், மிகுந்த வேதனை அடைந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டு உள்ளார். உயிரிழந்த தொழிலாளர்களின் உடல் அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கான செலவை அரசே மேற்கொள்ளும்.

ஆய்வுக்குழு
இனி வரும் காலங்களில், இத்தகைய விபத்துகள் நேராமல் தடுக்க ஆய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்து மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு, தொழிலாளர்கள் மாநில ஈட்டுறுதி காப்பீட்டு திட்டம் (ESI), வருங்கால வைப்பு நிதியை (PF) உடனடியாக வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

3 நாட்களில் அறிக்கை
இந்த விபத்து குறித்து இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, இயக்குநர், பொது சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் - செயலர் அறிக்கையினை 24 மணி நேரத்திற்குள்ளாகவும், முழுமையான விசாரணையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உடனடி நடவடிக்கை
இனிவரும் காலங்களில், இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, Hazardous Industriesகளை உடனடியாக குழு அமைத்து ஆய்வு செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் பர்வேஸ் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved