Also Watch
Read this
மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் வந்து, அஞ்சலி செலுத்தினர்.

மறைந்தார் பாக்யராஜ்...
தமிழ் சினிமாவின் திரைக்கதை வித்வான் என்ற போற்றப்பட்டவரும், பன்முக கலைஞருமாகவும் திகழ்ந்த கே.பாக்யராஜ், காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் கூட்டுவது, சிறு சிறு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பது இவரது திரைக்கதையின் பலம். இவரது படங்களில் கிளைமாக்ஸ் எப்போதுமே பார்வையாளர்கள் சிந்திக்கக்கூடிய வகையிலும், முற்றிலும் எதிர்பாராத விதமாகவும் இருக்கும். திரைப்படம் போலவே இவரது மறைவும் முற்றிலும் எதிர்பாராத விதமாக அமைந்தது தான் பேரதிர்ச்சி. திடீர் மாரடைப்பால் உயிரிழந்த கே.பாக்யராஜின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சாந்தனுவை கட்டி அணைத்து ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்
தமிழக அரசு சார்பில், பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் நேரில் வந்து, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ஆளுயர மாலையை முதல்வர் விஜயே எடுத்து வந்திருந்தார். தம்மை கண்டதும் கதறி அழுத பாக்யராஜ் மனைவி பூர்ணிமாவின் அருகில் அமர்ந்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் விஜய், பாக்யராஜ் மகன் சாந்தனுவை கட்டி அணைத்து தேற்றினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பாக்யராஜ் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, ராசா உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

"யாராலும் அமைக்க முடியாது"
எம்.ஜி.ஆரின் வாரிசு என்று அறியப்பட்ட பாக்யராஜை போல திரைக்கதை யாராலும் அமைக்க முடியாது என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாக்யராஜ் கலைப் பங்களிப்பை நினைவுகூர்ந்து உருக்கமாகப் பேசினார். தொடர்ந்து, பாக்யராஜ் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

நட்பை நினைவு கூர்ந்த பிரேமலதா
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த இயக்குநர் பாக்யராஜ்-க்கு இறுதி மரியாதை செலுத்தினார். பாக்யராஜ் மறைவு தமிழ்த் திரையுலகிற்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பு என்று வருத்தம் தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாக்யராஜ் உடனான நீண்டகால நட்பு மற்றும் திரையுலகில் அவர் செய்த சாதனைகளையும் நினைவு கூர்ந்தார்.

பன்முகத்தன்மை, மிகப்பெரிய ஆளுமை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, பாக்யராஜ் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தினார். பன்முகதன்மை, மிகப் பெரும் ஆளுமை என பாக்யராஜ்-க்கு புகழாரம் சூட்டிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, கிராமங்களில் உள்ளவர்களும் திரைத் துறையில் சாதிக்கலாம் என்பதற்கு முன் உதாரணமாக திகழ்ந்த பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறினார்.

நல்ல மனிதர்...
முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான, தமிழிசை சவுந்திரராஜன், பாக்யராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நல்ல இயக்குநரா, நடிகரா, அரசியல்வாதியா? என்று கேட்டால் அவர் நல்ல மனிதர் என்பேன் என்று பெருமிதம் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அவரது மறைவு மிகப்பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

"பாக்யராஜ் என்ற பல்கலை.யில் படிக்காத மாணவர்களே இல்லை"
மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இறுதி மரியாதை செலுத்தினார். பாக்யராஜ் என்ற பல்கலைக்கழகத்தில் படிக்காத மாணவர்களே இல்லை என்ற நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், சாந்தனு வெற்றி பெற வேண்டும் என்ற கனவை பார்க்காமல் போய்விட்டார் என்பது வருத்தமளிப்பதாக கூறியவர், அவருக்கு இறுதிப் புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்.

ஊடகத்துறையிலும் சாதித்தவர் என புகழாரம்
மறைந்த இயக்குநர் பாக்யராஜ்க்கு, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் அஞ்சலி செலுத்தினார். திரையுலகில் சீர்திருத்த கருத்துக்களை கொடுத்தவர் பாக்யராஜ் என்ற சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சினிமாவில் மட்டுமின்றி, ஊடகத்துறையிலும் சாதித்த பாக்யராஜ் மறைவு பெரும் வருத்தமளிப்பதாகவும், அவரது மறைவு தமிழ் திரையுலகினருக்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கும் பேரிழப்பு என்றார்.

பாக்யராஜ் மறைவு பேரிழப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். சமூக மற்றும் குடும்ப பிரச்னைகளை தமக்கே உரிய பாணியில் திரையில் நகைச்சுவையோடு காட்டிய பாசத்திற்கும் பண்பிற்கும் உரிய பாக்யராஜ் மறைவு பேரிழப்பு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருத்தம் தெரிவித்தார்.

ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை
புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். திரைக்கதை மன்னன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் பாக்யராஜ் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

எம்ஜிஆரின் அன்புக்கு உரியவர்
தமிழக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தினார். எம்ஜிஆர், பாக்யராஜ் இடையேயான நட்புறவை நினைவு கூர்ந்தார். தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என எண்ணிய பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். மிக சாதாரணமாக துணை இயக்குனராக தன் வாழ்க்கையை துவங்கி மிகப்பெரிய இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடையாளம் காணும் வகையில் இருந்த பாக்யராஜின் இழப்பு, தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

ஆழ்ந்த இரங்கல்...