Also Watch
Read this
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் குழுவுடன் சென்று பிரதமரை நேரில் சந்தித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

கர்நாடகாவின் முயற்சியை முறியடிக்கும் தவெக அரசின் அனைத்து நடவடிக்கைக்கும் திமுக துணை நிற்கும் என்றும் பேரவையில் உறுதி அளித்தார்.

எதிர்ப்பதே திமுகவின் நிலைப்பாடு
இதுகுறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக பேரவையில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்திற்கு திமுக ஆதரவு தெரிவிக்கிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதரத்தை அழிக்க முயற்சிக்கும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு என்பதே திமுகவின் நிலைப்பாடு ஆகும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக நடத்திய சட்டப் போராட்டமே காரணம் என்பதை அனைவரும் அறிவார்கள். கூட்டணியில் இருந்தபோதே கர்நாடகாவின் செயல்பாட்டை, அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார்.

ஒற்றுமையாக நின்று தடுப்போம்
மேகதாது அணை கட்டும் கா்நாடகாவின் முயற்சியை முறியடிக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் திமுக துணை நிற்கும். மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் குழுவாக சென்று மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக நின்று தடுப்போம்.

பட்டியலிட்ட உதயநிதி ஸ்டாலின்
ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே மேகதாது விவகாரத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.

கர்நாடகா மேகதாது அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியபோதே அதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினோம். திமுக அரசின் எதிர்ப்பு காரணமாகவே, விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி தராமல் திருப்பி அனுப்பப்பட்டது. மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழுவினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தனித் தீர்மானத்தை பிரதமரிடம் சென்று வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved