Also Watch
Read this
ஆளுநர் அர்லேகரின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் உரையை குறிப்பிட்டு, ஆட்சியாளர்களின் சமூக வேடம் கலைகிறது என அரக்கபறக்க விமர்சனம் செய்துள்ள திமுக ஐடி விங், நடப்பாண்டுக்கு பதில் அவர்கள் ஆட்சியில் இருந்த கடந்த ஆண்டை குறிப்பிட்டு கட்சித் தலைமையை கடுப்புக்கு ஆளாக்கி உள்ளது. ஆண்டுப்பிழை குறித்து நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானபிறகுதான் அதையே அறிந்த திமுக ஐடி விங், அவசர அவசரமாக அதனை டெலிட் செய்த நிலையில் அவசர குடுக்கை போன்று செயல்படும் ஐடி விங் கூடாரத்தையே வாஷ்அவுட் செய்யலாமா? என்ற ஆலோசனையில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தவெக அரசின் சட்டசபைக்கூட்டம்...
தவெக அரசு அமைந்த பிறகு, முதல்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் அர்லேகர், ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவிலான பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூக நீதி என்பது இந்த அரசின் அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கை மற்றும் வாக்குறுதியை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பினை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைந்து, விரைந்து முடிக்க நாம் மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர், தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வினை நடத்தும் எனத் தெரிவித்தார்.

திமுக ஐடி விங்க் பதிவு
இதனை, தனது எக்ஸ் தளத்தில் முதல் ஆளாய் ஓடிவந்து விமர்சித்தது திமுக ஐடி விங். தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி தற்போதைய முதலமைச்சர் வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையையும், ஆளுநரின் தற்போதைய உரையையும் அருகருகே ஒப்பீட்டுக்காக வைத்து, ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது என பெரிய எழுத்துக்களில் தலைப்பை வைத்து விமர்சன ஓப்பனிங்கை பக்காவாக ஆரம்பித்தது திமுக ஐடி விங்.

ஆனால், ஃபினிஷிங்கில்தான் பிரச்சனையே. தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, பின்பு ஒரு பேச்சா என விமர்சன கணையை வேகமாக தொடுத்த திமுக ஐடி விங், "சமூகநீதி கணக்காய்வினை மேற்கொள்ளாமல் மத்திய அரசின் பின்னால் பதுங்கிக் கொள்வது ஏன்? இதற்குப் பெயர் இரட்டை வேடமா? அல்லது பச்சோந்தித்தனமா?" என காட்டத்தை காட்டோ காட்டு என காட்டினர்.

தன் கண்ணையே...
கேள்விகள் கேட்கத்தானே எதிர்க்கட்சி? தவறுகளை சுட்டிக்காட்டத்தானே எதிர்க்கட்சி? அதுவும்கூட செய்யாவிட்டால் அந்த அந்தஸ்தில் இருப்பதில் தான் என்ன பலன்? என நியாயமாகவே எடுத்துக் கொண்டாலும் அந்த நியாயத்திலும் ஒரு நியாயம் வேண்டாமா? என பலரும் கேள்வி எழுப்பும் நிலைதான் தற்போது உருவாகி உள்ளது.

காரணம், திமுக ஐடி விங்கின் தேவையற்ற அசுரவேகம்தான்.. ஆளுநர் அர்லேகர் உரையாற்றியது 18.06.2026, ஆனால் ஐடி விங் குறிப்பிட்டதோ 18.06.2025. அப்படி பார்த்தால், கடந்த ஆண்டு ஆட்சியில் இருந்தது திமுக தான். பிழை என்னவோ ஒரே ஒரு எண் தான். ஆனால் தன் கண்ணையே தன்னால் குத்திக் கொள்வது போன்று கடந்த ஆட்சியையே திமுக ஐடி விங் குறைசொல்வதுபோன்று ஆகிவிட்டது.

கடும் கோபத்தில்...
இதுகுறித்து நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாக, அதன் பிறகுதான் அவசர அவசரமாக தனது ஆண்டுப்பிழை பதிவையே திமுக ஐடி விங் டெலிட் செய்தது. ஆனாலும், ஜெட்வேகத்தில் அந்த பதிவு பரவ ஆரம்பித்தது. இதனை பார்த்த கட்சித்தலைமை திமுக ஐடி விங் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்களாம்.

ஏற்கெனவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஐடி விங் ஆமை போன்று செயல்பட்டதால்தான் தோல்வியே கிடைத்தது என உடன்பிறப்புகளும், கட்சி நிர்வாகிகளும் கட்சி தலைமைக்கு புகாருக்கு மேல் புகாரை அடுக்கி உள்ளார்கள். தேர்தலுக்கு முன்பு இணையதள போரில் ஐடி விங் இறங்கி ஆடாமல் அசால்ட்டாக இருந்ததால் தான் 5 ஆண்டுகள் கைவிட்டுப் போனதாக கட்சி நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முகத்திற்கு நேராகவே கூறியதோடு இனியும் இப்படியே விட்டால் எதிர்க்கட்சி நாற்காலியும் இல்லாமல் போகும் என எச்சரித்தார்களாம்.

அடுத்த சிக்கலில்...
இதனால், ஐடி விங் பொறுப்பாளர் ராஜாவை மாற்றும் மனநிலைக்கு தள்ளப்பட்டாராம் திமுக தலைவர் ஸ்டாலின். இதையறிந்து, உஷாரான திமுக ஐடி விங் இனி படு ஆக்டிவாக இருக்கிறோம் என எதிர்க்கட்சியை விமர்சனம் செய்ய கண்கொத்தி பாம்பாக இறங்கியது. இதற்கு ஏற்றார்போல, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது ஜான் பிரிட்டோ என அமலாக்கத்துறை சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிக்கை வெளியிட்டது. அந்த ஜான் பிரிட்டோ அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர்தான் என அமலாக்கத்துறையின் அறிக்கையை குறிப்பிட்டு குற்றம்சாட்டியது திமுக ஐடி விங்.

மானத்தை வாங்குவதா?
இதற்கு, உலகத்தில் ஒரே ஒரு ஜான் பிரிட்டோதான் இருப்பாரா? அந்த ஜான் பிரிட்டோ நான் மட்டும்தானா? என ஆதவ் அர்ஜூனாவின் உறவினரே புகார் அளித்து தனது மனக்குமுறலை கொட்டினார். இதனிடையே, குற்றம் சாட்டப்படும் ஜான் பிரிட்டோ அமைச்சரின் உறவினர் இல்லை என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பிலேயே தகவல் வெளியானதாக கூறப்பட்டது.

வெறும் ஜான் பிரிட்டோ என்ற பெயரை மட்டும் ஸ்கேன் செய்து கொண்டு, எடுத்தோம் கவுத்தோம் என ஏதாவது ஒரு பதிவை வெளியிட்டு மானத்தை வாங்குவதா? நம் மீது வீசப்படும் அவதூறுகளுக்கு பதில் சொல்ல பம்பரமாய் செயல்பட சொன்னால், நம் மீதே அவதூறுகளை கிரியேட் செய்வதா? என திமுக தலைமை, முன்னாள் அமைச்சரான ஐடி விங் பொறுப்பாளர் ராஜா மீது கடுப்பின் உச்சிக்கே சென்றது.

ஒன்பதே நாட்களுக்குள்...
அதோடு, ”அவதூறுக்கு பெயர்போன திமுக ஐடி விங்” என சமூக வலை தளங்களில் கமெண்டும் பரவ தலைமைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முந்திரிக்கொட்டைபோன்று ஜான் பிரிட்டோவை வம்புக்கு இழுத்த சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆகும் நிலையில் அடுத்த 9 நாட்களுக்குள் மீண்டும் ஒரு அவசர பதிவை வெளியிட்டு தலைமையின் ஆத்திரத்தை சம்பாதித்துள்ளதாம் திமுக ஐடி விங். எதிர்க்கட்சியாக இருந்து ஆளுங்கட்சியை விமர்சனம் செய்யும்போது நேர்த்தி என்பது மிக முக்கியம். அதிலும், தேதி, ஆண்டு, மாதம் இவைகள் எல்லாம் வரலாற்றில் இடம்பிடிக்க கூடியவை. அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு நடக்கும் ஆளுநர் உரையை கடந்த ஆண்டு என குறிப்பிடுவது எவ்வளவு அபத்தம்.

மன உளைச்சலுக்கு ஆளாக்குவதா?
விமர்சனம் செய்வதில் அப்படி என்ன ஆர்வம்? ஆளுநர் அர்லேக்கர் உரை குறிப்பிட்ட சில நிமிடத்திலேயே அழிந்துவிடுமா? அவசரகுடுக்கை போன்று செயல்படுவதால் யாருக்கு அவமானம்? தேர்தலில்தான் சரியாக செயல்படவில்லை தேதியில்கூடவா சரியாக செயல்பட முடியாது? அதைகூட கவனிக்காமல் அப்படி எந்த கோட்டையை பிடிக்கப் போகிறோம்? என திமுக நிர்வாகிகள் மீண்டும் தலைமையிடமே கோபத்தை காட்டி உள்ளார்களாம்.

அவர்களின் கோபத்தை சமாளிக்க முடியாத தலைமையும், நேரங்காலம் பார்க்காமல் தேர்தலுக்கு முன்பு வேலை செய்ய சொன்னால், தோல்வியை தழுவி மனம்நொந்து இருக்கும்போது மாங்கு மாங்கென வேலை செய்து மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதா? சொன்னதை விட்டுவிட்டு சுரைக்காயை பறித்து கொண்டிருந்தால் என்னதான் செய்வது? என திமுக ஐடி விங்கால் உடைந்துபோய் உள்ளார்களாம். யாருக்கு தெரியும் தலைமையின் கோபம் ஐடி விங் பொறுப்பாளர் ராஜாவை அந்த பொறுப்பில் இருந்தே தூக்க வைக்கலாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved