Also Watch
Read this
விசிகவோடு கூட்டணி இல்லை என்று அறிவித்தது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான், விசிக இல்லை என்று கூறிய, அக்கட்சி தலைவர் திருமாவளவன், தவெக கூட்டணி அமைத்தால் நிச்சயம் அதில் இடம்பெறுவோம் என திட்டவட்டமாக கூறினார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சோஃபா விமர்சனத்துக்கும் திருமாவளவன் விளக்கமளித்திருக்கிறார்...

தவெக ஆட்சி, மகிழ்ச்சி இல்லை
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலான விருதுகள் வழங்கும் விழாவில், திருமாவளவன் பேசியதாவது;
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெருங்கட்சியாக தவெக வந்துள்ளது. நமக்கு அதில் மகிழ்ச்சி இல்லை தான். ஏனென்றால், திமுக கூட்டணியில் போட்டியிட்டோம். எப்படி நாம் மகிழ்ச்சி அடைய முடியும்? இன்னும் சொல்லப்போனால் தவெகவை விமர்சித்து இருக்கிறோம். எப்படி பதவிக்காக உடனே போய் ஒட்டிக் கொள்ள முடியும்? எப்படி பதவிக்காக கட்டி புரண்டு உருள முடியும்?

துணிச்சலான முடிவு
ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை எனக்கூறி, விமர்சித்து விட்டு, இல்லை இல்லை உங்களுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம், எனக்கு துணை முதலமைச்சர் பதவி தாருங்கள் என்றா பேசினோம்? கெஞ்சினோம்? அதற்காகவா காத்திருந்தோம், இல்லை. நாங்கள் அப்படி பேசியது எங்களுக்கு இருந்த சந்தேகம். முதலமைச்சர் விஜய் நினைத்திருந்தால் அதிமுக ஆதரவை பெற்று ஆட்சி அமைத்திருக்க முடியும். அதிமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்க முடியும்.

ஆனால், இதையெல்லாம் தவிர்த்து, விஜய் எடுத்து முடிவு எங்களுக்கு வியப்பை கொடுத்தது. மதச்சார்பற்ற சக்திகளாக, களத்தில் மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ள எங்களைப் போன்றவர்களை அழைத்து, ஆதரவு கேட்டது துணிச்சலான முடிவு. ஆகவே, தவெக எடுத்து இருக்கும் நிலைப்பாட்டை நாங்கள் அங்கீகரிக்க வேண்டியது, விசிக பொறுப்பு.

இதில் என்ன துரோகம்?
மதச்சார்பின்மையில் தவெகவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. தேர்தலுக்கு பிறகு தவெக எடுத்த நிலைப்பாடு எங்களுக்கு சந்தேகத்தை போக்கி உள்ளது. ஆகவே, விசிக ஆதரவு நல்குகிறோம். உறுதியாக இருப்போம். என்றைக்கும் தோழமைக்கு உண்மையாக இருப்போம். 5 ஆண்டுகள் வரை தவெக ஆட்சி தொடரும். அதற்கு நாங்கள் துணை இருப்போம் என கூறி உள்ளோம். இதில் என்ன துரோகம் உள்ளது?

திமுக கூட்டணியில்...
திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்று, திமுக தலைமை அறிவித்து உள்ளது. இதுவரை நான் அறிவிக்கவில்லை. திமுக கூட்டணியில் விசிக இல்லை என நாங்கள் இன்னும் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருக்கின்றோம் என்றும் கூறவில்லை. அமைச்சரவையில் இருக்கிறோம். கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை கடந்த 1 ஆம் தேதி நடந்ததில், பங்கேற்றோம். ஆனால், அதில் ஒரு முடிவும் எடுக்கவில்லை. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதில் இடம்பெறுவோம். அதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், திமுக தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்றுகூடி விசிகவில் உள்ள ஒருவரை அழைத்து கட்சியில் இணைந்த போதே திமுக தலைமையே சொல்கிறது விசிக உடன் எங்களுக்கு உறவு இல்லை என்று. நானா சொன்னேன்?
இவ்வாறு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.