Also Watch
Read this
நெல்லை வீரவநல்லூர் அருகே தந்தை, மகன் இரட்டைக்கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். போலீசாரை கண்டதும் தப்பியோடிய போது தவறி கீழே விழுந்ததில் கைதிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தந்தை, மகனுக்கு நேர்ந்த விபரீதம்
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான காளிமுத்து. இவர் கடந்த 2ஆம் தேதி மாலையில் தனது மகன்களுடன் இரு சக்கர வாகனத்தில், ரெட்டியார்புரத்தில் இருந்து மூலச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
மாதுடையார்குளம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் மர்ம கும்பல் பின்தொடர்ந்தனர். காரால், காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில், காளிமுத்து, ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த கும்பல் காளிமுத்துவின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது.

தனிப்படை விசாரணை
இதுகுறித்து, வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ், குமார், ஊர் காடு பகுதியை சேர்ந்த முத்துச்செல்வன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, மூலச்சி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், ராஜதுரை, முத்துபட்டன், மகாலிங்கம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை தேடி வருகின்றனர்.

கையில் மாவுக்கட்டு
இந்த நிலையில், இந்த வழக்கில் மூலச்சி பகுதியை சேர்ந்த 29 வயதான கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பியோடிய கிருஷ்ணன் கீழே தவறி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இரட்டை சம்பவ வழக்கில் இதுரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.