Also Watch
Read this
மாமனார் வீட்டில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ தங்க நகை திருட்டு சம்பவம் தொடர்பாக, மருத்துவரான மருமகன் உட்பட 3 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை ரியல் எஸ்டேட் தொழிலதிபர்
கோவை மாவட்டம், கணபதி நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சண்முகபாண்டியன், தனது மகளை கடந்த 2024, பிப்ரவரி மாதம் மருத்துவரான விக்னேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். பின்னர், விக்னேஷின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, சண்முகபாண்டியன் தனது மருமகனையும் அவரது குடும்பத்தாரையும், கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் தங்க வைத்துள்ளார்.

சொத்தை கேட்ட மருமகன்
சில மாதங்களுக்குப் பிறகு, சண்முகபாண்டியனின் அந்த வீட்டை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு தனது மனைவிக்கு டாக்டர் விக்னேஷ் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்திற்குள் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2025 டிசம்பரில் அந்த வீட்டை சண்முகபாண்டியன் மற்றொரு நபருக்கு 15 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளார். இதனால் அதிருப்தியடைந்த விக்னேஷின் குடும்பத்தினர் திடீரென அந்த வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறி உள்ளனர்.

அவர்களின் திடீர் வெளியேற்றத்தால் சந்தேகமடைந்த சண்முகபாண்டியன், விக்னேஷிடம் தனது லாக்கர் சாவியைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், மருமகன் சாவியைத் தர மறுத்ததால் லாக்கரை உடைத்துப் பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 8 கிலோ எடையிலான தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வரவே சண்முகபாண்டியன் அதிர்ச்சி அடைந்தார்.

போலீசில் புகாரளித்த மாமனார்
இதுகுறித்து, விக்னேஷிடம் கேட்டபோது முதலில் தெரியாது என்று கூறிவிட்டு, பின்னர் வெறும் 100 சவரன் நகைகளை மட்டும் திருப்பித் தந்துவிட்டு, மீதி நகைகளைத் தராமல் சண்முகபாண்டியனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கடும் ஆத்திரமடைந்த தொழிலதிபர் சண்முகபாண்டியன் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

காவல்துறை வழக்குப்பதிவு
புகாரின் பேரில் நகைகளைத் திருடியதாக மருமகனான மருத்துவர் எம்.விக்னேஷ், அவரது தாய் வாசுகி மற்றும் சகோதரி மருத்துவர் எம்.ஜீவிதா ஆகிய மூன்று பேர் மீதும்
குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமனார் வீட்டிலேயே எட்டு கிலோ மதிப்பிலான தங்க நகைகளை மருத்துவர் மருமகன் திருடியுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.