Also Watch
Read this
நெல்லை அருகே பைக்கை அம்பாசிடர் காரால் இடித்து தள்ளி 5 வயது சிறுவனை கொன்ற 5 பேர் கொண்ட கும்பல், அவரது தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்து, தலையை தனியாக எடுத்துக்கொண்டுபோய் ஊருக்குள் வைத்த அதிர்ச்சி சம்பவம் அரேங்கேறி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு தன் தந்தை எப்படி அம்பாசிடர் காரால் இடித்து கீழே தள்ளப்பட்டு, கொலை செய்யப்பட்டாரோ அதே பாணியில், தனது சகோதரர்களுடன் சேர்ந்து மகன் இரட்டைக் கொலையை செய்துள்ள நிலையில் 6 தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்கும் பணியில் இறங்கி உள்ளனர்.

கொடூர சம்பவம்
15 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை கொன்ற நபரை, அவரது மகன் காத்திருந்து கொன்றதோடு மட்டுமல்லாமல் தலையை தனியாக அறுத்து எடுத்துச் சென்று, ஊரில் உள்ள பெண்களிடம் காட்டி, பாருங்கள் இதற்குதான் இத்தனை ஆண்டுகள் தவம் இருந்ததாகவும் கூறி அதிர வைத்துள்ளார்.

காரால் மோதி விட்டு... விபரீதம்
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. விவசாயியான இவர் நெல்லிக்காய் பறிப்பதற்காக வீரவநல்லூரில் இருந்து பொட்டல் பகுதிக்கு செல்லக்கூடிய சாலை வழியாக தனது 2 மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கரம்பை பகுதியில் அவ்வழியாக வந்த அம்பாசிடர் கார் ஒன்று காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது வேண்டுமென்றே வேகமாக இடித்து தள்ளி உள்ளது. இதில், காளிமுத்துவின் பைக் காருக்கு அடியில் சிக்க அவரது 5 வயதான இளைய மகன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல், அவரது 10 வயதான மூத்த மகன் சின்னராஜ் காயம் ஏற்பட்டு முட்புதருக்குள் விழுந்தார். இந்நிலையில், பைக்கை ஓட்டி வந்த காளிமுத்து அம்பாசிடர் காரில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் கையில் சிக்கினார்.. அரிவாளுடன் வெறிகொண்டு சுற்றி வளைத்த அந்த கும்பல் காளிமுத்துவை வெட்டிக் கொன்று, கழுத்தை கரகரவென அறுத்து தலையை மட்டும் தனியாக எடுத்து சென்றனர். பின்னர் தலையை மூலச்சி ஊருக்குள் வைத்துவிட்டு அந்த கும்பல் எஸ்கேப் ஆனது.

15 ஆண்டுகளுக்கு முன்னர்...
இதுகுறித்து அங்குள்ள பெண்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார் தலையை மீட்டதுடன், கொலை நடந்த இடத்திற்கும் சென்று முண்டத்தை மீட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த சிறுவன் ஜெயராஜின் சடலத்தையும் மீட்ட போலீசார், காயங்களுடன் முட்புதருக்குள் கிடந்த காளிமுத்துவின் மூத்த மகன் சின்னராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் பாண்டியன் என்பவர் இதேபோன்று அம்பாசிடர் காரால் இடித்து தள்ளப்பட்டு, தலை தனியே முண்டம் தனியே வெட்டி எடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அந்த கொலையில் காளிமுத்து தான் ஏன் ஒன் குற்றவாளி என்பதும், அதனால்தான் பெருமாள் பாண்டியனின் மகன் காத்திருந்து அதேபாணியில் காளிமுத்துவை தனது சகோதரர்கள் 5 பேருடள் சேர்ந்து பழி தீர்த்துள்ளதாகவும் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து, 6 தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்கும் பணியில் இறங்கி உள்ளனர்.

காத்திருந்து பழி தீர்த்த மகன்
இதுஒருபுறமிருக்க, காளிமுத்துவின் அக்கா மகன் பிரசாந்த் என்பவர் கொலை குறித்து சில தகவல்களை கூறி அதிர வைத்துள்ளார். தெரு பைப்பில் தண்ணீர் பிடிப்பது தொடர்பான பிரச்சனையில் பெருமாள் பாண்டியன் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அவரது மகன் பட்டு அந்தநேரத்தில் சிறுவன் என்பதால் 15 ஆண்டுகள் உரம்போட்டு குரோதத்தை வளர்த்து காத்திருந்து சகோதரர்கள் உதவியுடன் தனது தாய்மாமாவை வெட்டிக் கொன்றுள்ளதாகவும் கூறினார்.

சினிமாவில் வருவது போல்...
இந்த கொலையை மகாலிங்கம், சுபாஷ், மகேந்திரன் உள்ளிட்டோர் செய்ததாகவும் கூறிய பிரசாந்த், தனது தாய்மாமாவின் தலையை ஊரில் உள்ள பெண்களிடம் காட்டி பாருங்கள் இந்த தலையை காவு வாங்க நான் 15 ஆண்டுகள் காத்திருந்தேன். தற்போது தான் காளிமுத்துவின் தலையை தன் கையில் ஏந்தும் நேரம் கிடைத்துள்ளது என சினிமாவில் வருவதுபோன்று அரிவாளுடன் பேசியதாக கூறினார்.

நடுநடுங்க வைத்துள்ள இந்த இரட்டைக் கொலையால் நெல்லைச்சீமையே பதற்றத்தில் உள்ளது. அதேபோல், தன் மகனை அள்ளி அணைத்தபடி அழுத காளிமுத்துவின் மனைவியின் கதறலும் காண்போரை கலங்க வைத்தது.