Also Watch
Read this
தூத்துக்குடியில், சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட சபை ஊழியரை கண்டித்த மதபோதகரை, தலையணையால் அமுக்கி கொ* செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கொ*க்கு உடந்தையாக இருந்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த வழக்கின் பின்னணி என்ன?

உயிரிழந்த மத போதகர் கனகராஜ்
சென்னை, பெரம்பூர் அருகே உள்ள மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் 73 வயதான கனகராஜ். இவர், தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள பெந்தேகோஸ்தே சபையில் மதபோதகராக இருந்தார். 17 வயதில் வீட்டைவிட்டு வெளியேறிய இவர் கிறிஸ்தவராக மதம் மாறியதோடு திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சபை ஊழியர்கள் தங்கும் இடத்தில் உள்ள தனது அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறி, சபையில் இருந்த சிலர் அடக்கம் செய்ய முயன்றனர். அப்போது, சென்னையில் இருந்து வந்த கனகராஜின் உறவினர்கள் அவரது கழுத்தில் நகக்கீறல் இருப்பதாகவும், அதனால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறி புகார் அளித்தனர். அதன் பின்னர், மதுரையில் நடந்த தடயவியல் ஆய்வக சோதனையில் பாதிரியார் கனகராஜ் கொ* செய்யப்பட்டிருப்பது உறுதியானது. ஆனாலும், குற்றவாளிகளை கைது செய்வதில் சிப்காட் போலீசார் ஈடுபாடு காட்டவில்லை.

சம்பவத்தின் பின்னணி
அதன்பின்னர், சபை விசுவாசிகளுக்குமே சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால், கனகராஜின் உறவினர்களும், சபை விசுவாசிகளும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகே வழக்கு விசாரணை அடுத்தகட்டத்திற்கு சென்றது. சபையில் பணியில் இருந்த நாகர்கோவில் அருகேயுள்ள வாத்தியார்விளையைச் சேர்ந்த டைட்டஸ் என்ற 31 வயது இளைஞர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

அதோடு விசாரணைக்கும் சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால் தங்கள் பாணியில் விசாரணை நடத்தி உள்ளனர் போலீசார். அப்போதுதான், பல உண்மைகளை கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார். மதபோதகர் கனகராஜ் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கணக்கு வழக்குகளில் கறாராக இருந்துள்ளார். அது டைட்டஸை எரிச்சலடைய வைத்துள்ளது. அதோடு, அங்குள்ள மற்றொரு உதவி பாஸ்டர் ஜான் தாமஸையும் கோபமடைய வைத்துள்ளது.

தலையணையால் அமுக்கி...
இதனிடையே, வெளியிடங்களுக்கு ஜெபத்திற்கு சென்ற டைட்டஸ் பல பெண்களிடம் பாலியல் சேட்டையிலும் ஈடுபட்டுள்ளார். இதனையறிந்த கனகராஜ் டைட்டஸை வெளியிடங்களுக்கு அனுப்பாமல் சபையிலேயே அமர வைத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த டைட்டஸ், மதபோதகர் என்ற போர்வையில் பெண்களிடம் தகாத உறவில் ஈடுபடுவதும், அத்துமீறுவதும் சகஜம்தான் எனப்பேசி கனகராஜை மேலும் அதிர வைத்துள்ளார். இதனிடையே, சபையில் பணிபுரிந்த ஒரு பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார் டைட்டஸ். இதனை கண்ணால் பார்த்தும், உதவி பாஸ்டர் ஜான் தாமஸ் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட பெண் புகார் அளிக்க, டைட்டஸை மதபோதகர் கனகராஜ் கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு, ஜான் தாஸையும் திட்டி உள்ளார். இதனால் மதபோதகர் மீது ஆத்திரமடைந்த டைட்டஸ், கம்ப்யூட்டர் சர்வீஸ் நடத்தி வந்த தனது 29 வயதான தம்பி அன்டோ மற்றும் அவரது நண்பரான கோட்டாறு பகுதியை சேர்ந்த ரகுவை வரவழைத்து அவர்களது உதவியுடன் கனகராஜ் முகத்தில் தலையணையால் அமுக்கி உள்ளனர்.

போலி சான்றிதழ், டாக்டர் கைது
அப்போது, தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்ற கனகராஜை 3 பேரும் அடித்ததோடு, தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ஒருவரிடம் மாரடைப்பால் கனகராஜ் உயிரிழந்ததாக போலி சான்றிதழ் வாங்கினார்.

அதுமட்டுமல்லாது, கனகராஜுக்கும் வேறு போதகர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததைப் போலவும், கனகராஜ் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார் என, ஒரு நாடகத்தை அரங்கேற்ற நாகர்கோவிலில் இருந்து ஒரு பாலியல் தொழிலாளியையும் ஏற்பாடு செய்துள்ளார். இது அத்தனையுமே தெரிந்ததும் தெரியாததுபோல இருந்து கொண்டார் ஜான் தாமஸ். சம்பவம் நடந்த ஓராண்டு காலத்திற்கு பிறகு டைடஸை கைது செய்த போலீசார் அன்டோ மற்றும் அவரது நண்பர் ரகுவையும் கைது செய்தனர். மேலும், கொலையை மாரடைப்பாக மாற்றி போலி சான்றிதழ் வழங்கிய டாக்டரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இரட்டை ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் இரண்டில் நடைபெற்று வந்தது. வழக்கின்போதே உதவி பாஸ்டர் ஜான் தாமஸ் உயிரிழந்த நிலையில், டைட்டஸிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், கொ*க்கு உடந்தையாக இருந்த டைட்டஸின் சகோதரர் அன்டோ மற்றும் ரகு ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு கொலையாளிகளின் கார் மற்றும் செல்போன்களை அரசுடைமையாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.