Also Watch
Read this

அதிமுகவில் இருந்து மீளாக் கண்ணீருடனும், மிகுந்த வேதனையுடனும் விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். கரூர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், இபிஎஸ் மீது குற்றம்சாட்டி கட்சியை விட்டும் விலகினார்.

எம்எல்ஏ பதவி ராஜினாமாவை தொடர்ந்து...
இதுதொடர்பாக, எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
எம்ஜிஆரின் லட்சியப் பாதையிலும், ஜெயலலிதாவின் பேரன்பிலும் என் அரசியல் பயணத்தை தொடங்கியவன் நான். பதவி, சுயநலத்திற்காக இந்த இயக்கத்திற்கு வந்தவனல்ல. இந்த இயக்கத்தை என் மூச்சாக கருதி வாழ்ந்தவன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இயக்கம் சந்தித்த சோதனைகள் அத்தனையும் நீங்கள் அறிவீர்கள். அத்தனை நெருக்கடி நேரங்களிலும் பொதுச் செயலாளர் பழனிசாமி பின்னால் உறுதியாக நின்றவன் இந்த விஜயபாஸ்கர்.

100க்கும் மேற்பட்ட வழக்குகள்
திமுக ஆட்சியில், என் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன. கட்சியினர், குடும்பத்தினர் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பாய்ந்தன. செந்தில்பாலாஜியை எதிர்த்து, சட்டப் போராட்டம் நடத்தி எத்தனையோ துரோகங்களை தாங்கி மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியவன் நானும், துணை நின்ற கட்சி தொண்டர்களும். ஆனால், இத்தனை தியாகங்களுக்கும், நான் சுமந்த வேதனைகளுக்கும் பரிசாக கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்டுமே.

ரத்தக்கண்ணீர் வடிக்கிறது...
இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து யாருடைய மக்கள் விரோத, அராஜக ஆட்சியை வீழ்த்த வழக்குகளையும், ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ இன்று அதே தீய சக்திளுடன் கைகோர்த்து, அவர்கள் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுகள் நாம். நமக்கு போய் இப்படியொரு எண்ணம் வரலாமா? தீய சக்தி திமுக உடன் அதிமுக எப்படி கைகோர்க்க முடியும்? நீங்கள் முன்மொழிந்த அந்த சமரச முடிவுக்கு தான் எதிராக நின்றோமே தவிர, உங்களின் தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. உங்களைத் தான் இந்த இயக்கத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக நாங்களெல்லாம் உயிரைக் கொடுத்து முன்னிறுத்தினோம்.

மக்கள் பயணம் தொடரும்
எங்களின் எதிர்ப்பு, தொண்டர்களின் தார்மீக உணர்வுகளை துச்சமாகக் மதித்து, நீங்கள் எடுத்த தன்னிச்சையான முடிவு தான், ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவிலும் வேதனையிலும் நிறுத்தி உள்ளது. உங்களின் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுக்கு பலியாக, எத்தனையோ ரணங்களைச் சுமந்த இந்த விஜயபாஸ்கரும் என் தோழர்களும் தயாராக இல்லை. இந்த இயக்கத்திற்காக என் உழைப்பையும், என் வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்து விட்டேன். இன்று இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும், மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். என் உயிரினும் மேலான கரூர் தொகுதி மக்களே உங்களின் சேவகனாக மக்கள் பயணம் என்றும் தொடரும்.
இவ்வாறு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved