Also Watch
Read this
ராமநாதபுரத்தில் தாயின் அருகே தூங்கி கொண்டிருந்த 6 வயது சிறுமியை சொந்த தாய்மாமனின் மனைவியே உறைகிணற்றில் உயிரோடு தூக்கிப் போட்டு கொ* செய்த சம்பவம் உறைய வைத்துள்ளது. சூரியன் உதிக்கும் முன்பே சிறுமியை கொ* செய்துவிட்டு ஆளோடு ஆளாக அமர்ந்து கமுக்கமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த அத்தை போலீசில் சிக்கியது எப்படி? அதன் பின்னணி என்ன?

ஒட்டு மொத்த அதிர்ச்சி
உறங்கி கொண்டிருந்த சிறுமி, உறைகிணற்றில் சடலமாக கிடக்க, குற்றவாளியை கைது செய்யாமல் சடலத்தை வாங்கமாட்டோம் என ஊரே ஒன்று திரண்டு போராட்டத்தில் குதிக்க, கடைசியில் சொந்த அத்தைதான் குற்றவாளி என்பது வெளிச்சத்திற்கு வர, அதிர்ச்சியில் உறைந்தது அந்த ஊர் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் தான்.

சிறுமி காணவில்லை... பதற்றம்
மதுரை பைகாரா முத்துராமலிங்கபுரம் 2ஆவது தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாலகணேஷ். இவரது மனைவி கார்த்திகை செல்வி 6 வயதான தனது இரட்டை மகள்களுடன் ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு 10 மணிக்குமேல் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற நிலையில், நள்ளிரவில் புழுக்கமாக இருந்ததால் கதவை திறந்து போட்டுள்ளார் கார்த்திகை செல்வி. இந்நிலையில், அதிகாலை 5 மணியளவில் திடீரென கண்விழித்த தாய் அருகில் படுத்திருந்த தனது மகள் சாய் தீப்தியை காணவில்லை என பதறி உள்ளார். இதனை தொடர்ந்து உறவினர்கள் அனைவரும் சேர்ந்து சிறுமியை தேடி உள்ளனர். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள உறைகிணற்றில் சிறுமி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உறவினர்கள் போராட்டம்
இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை யாரேனும் கொ* செய்து கிணற்றில் தூக்கி வீசினார்களா? அல்லது சிறுமியே தூக்கத்தில் எழுந்துபோய் கிணற்றில் விழுந்திருப்பாரா? என்ற கோணத்தில் விசாரணையில் இறங்கினர். இதனிடையே, சிறுமி கிணற்றின் அருகே செல்லமாட்டார், அதுவும் கிணற்றின் சுவர் உயரமாக இருக்கும்போது சிறுமியால் எப்படி அதன்மீது ஏறி விழுந்திருக்க முடியும்? மர்ம நபர்கள் தான் கொ* செய்திருப்பதாக குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இறப்பில் மர்மம்
அதேபோல், தனது மகளை இழந்த வருத்தத்தில் பேசிய தாய் கார்த்திகை செல்வி, தன் காலையே மகள் சுத்தி சுத்தி வருவாளே தவிர தங்களின் துணை இல்லாமல் எங்கும் அசையகூட மாட்டாள் எனக்கூறியதோடு அவரது இறப்பில் மர்மம் உள்ளதாகவும் கூறினார். இப்படி உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்க, போலீசாரின் விசாரணை ஊரில் உள்ளவர்கள் பக்கமும் சொந்த பந்தங்களின் பக்கமும் திரும்பியது. அப்போது, எதுவுமே தெரியாததுபோல ஆளோடு ஆளாக அமர்ந்து அழுது கொண்டிருந்த சிறுமியின் அத்தை சபரிகாவிடமும் சாதாரண விசாரணை நடத்தப்பட்டது. அந்த சாதாரண விசாரணைக்கே முகத்தில் படபடப்புடன் வார்த்தைகளை மாறிமாறி உளறி கொட்டி உள்ளார் சபரிகா. அதனால், துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர் போலீசார். அப்போதுதான், சிறுமியின் சொந்த பந்தங்களையே அதிர வைக்கும் தகவலை கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தினார் அத்தை சபரிகா.

அத்தையே குற்றவாளி
கார்த்திகை செல்வியின் உடன்பிறந்த தம்பியான அஜித்தை, சபரிகா காதல் திருமணம் செய்துள்ளார். நகையோ, பாத்திரமோ, வரதட்சணையோ என எதுவுமே சபரிகாவின் பெற்றோர் அவருக்கு கொடுக்காததால் மாமியார் அவரை மதிக்கவில்லை என தெரிகிறது. இதனிடையே, சபரிகாவிற்கு பிறந்த பெண் குழந்தையையும் மாமனார்-மாமியார் சரவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், மகள் வயிற்று பேத்திகள் மீது மாமியார் அதிக பாசம் வைத்திருந்ததாகவும், என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்ததாவும் தெரிகிறது. அதிலும், சாய் தீப்தி மீது மாமியார் கொள்ளைப்பிரியம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், சிறுமியும் பாட்டியோடு ஒட்டிக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு செல்வதற்கே அழுது அடம்பிடிப்பது வழக்கமாம்.

அத்தை கைது
இதனால், ஆரம்பத்தில் இருந்தே மாமியார் மீதும், சாய் தீப்தி மீதும் ஆத்திரத்தில் இருந்த தாய்மாமனின் மனைவி சபரிகா அந்த ஆத்திரத்தை தீர்ப்பதற்கான நேரம் பார்த்து காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நேரம்தான் அதிகாலை 3 மணி. தாய் மற்றும் பாட்டிக்கு இடையில் அசந்து தூங்கி கொண்டிருந்த சாய் தீப்திகாவை அசையாமல் தூக்கிய அத்தை சபரிகா, உறைகிணற்றில் உயிரோடு தூக்கி வீசிவிட்டு அமைதியாக வீட்டுக்குள் வந்து தூங்கி உள்ளார். அதிகாலை 5 மணியளவில் சிறுமி இல்லாததை கண்டு அனைவரும் தேட தன்பங்குக்கு அரக்க பறக்க சபரிகாவும் தேடி உள்ளார். கடைசியில் அவர்தான் கொடூர வில்லியே என விசாரணையில் அம்பலமாக போலீசார் அவரை கைது செய்தனர்.