Also Watch
Read this
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்குகளில், மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளால் அன்றாடம் இன்னலுக்கு ஆளாகி வருவதாக கூறும் பொதுமக்கள், குப்பைகளை அகற்றி ஆளரவமற்ற காலி இடங்களுக்கு குப்பைக் கிடங்குகளை மாற்ற வேண்டும் என ஒருமித்த குரலில் ஒரே கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

குப்பைகள் கேள்விக்குறி
ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதான பணிகளில் மிகவும் முக்கியமாக இருப்பது, அந்தந்த பகுதிகளில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது தான். அப்படி துரிதகதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், அதே வேகத்துடன் தரம்பிரிக்கப்பட்டு அகற்றப்படுகிறதா? என்றால், அது நிச்சயம் கேள்விக்குறி தான்.

குப்பை கிடங்கை சுற்றி...
உரம் தயாரிப்பு, நிலக்கரிக்கு மாற்றாக சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக அனுப்பி வைக்கப்படுவது என பல்வேறு முறைகளில் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் தாண்டி குப்பை கிடங்குகளில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளால், அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சந்திக்கும் இன்னல்களை சொல்லி மாளாது.

கோவை மாநகராட்சியில்...
அந்த வகையில் கோவை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள வெள்ளலூர் குப்பைக் கிடங்கில், 100 ஏக்கருக்கு மேல் சுமார் 25 லட்சம் டன் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பைக்கிடங்கு வளாகத்தில் குப்பைக் கழிவுகள் மூலம் உரம் தயாரிக்கும் நிறுவனமும் இயங்கி வருகிறது. கோவை மாநகரின் 100 வார்டுகளில் தினசரி சேகரமாகும் 1000 டன் குப்பைகளும் இங்கு கொண்டு வந்துதான் கொட்டப்படுகிறது.

மூச்சு கூட விட முடியவில்லை
கடும் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், கடும் சிரமத்துக்கு ஆளாகி வருவதோடு, குப்பைக்கிடங்கை சுற்றி சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு, தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வருவதாக வேதனை தெரிவித்து உள்ளனர். அவ்வப்போது குப்பைக் கிடங்கில் ஏற்படும் தீ விபத்தால் புகை மண்டலம் சூழ்ந்து, நிம்மதியாக மூச்சு விடக்கூட முடிவதில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில்...
திருப்பூர் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் கைவிடப்பட்ட பாறைக்குழிகளில் கொட்டப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் 800 டன் வரை சேகரமாகும் குப்பைகள், முதலிபாளையம், காலம்பாளையம், நெருப்பெரிச்சல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கைவிடப்பட்ட பாறைக்குழிகளில் தரம் பிரிக்காமல் கொட்டப்படுகின்றன.

விஷமான நிலத்தடி நீர்
குடிப்பதற்கு உகந்த நீரின் TDS அளவு 150 ppm முதல் 300 ppm என்ற அளவில் இருக்க வேண்டும் என்ற நிலையில், இங்குள்ள பாறைக்குழிகளில் காணப்படும் தண்ணீரின் TDS அளவோ அபாய கட்டங்களை எல்லாம் கடந்து 1.60 லட்சம் ppm என்ற அளவில், எந்த விதமான பயன்பாட்டிற்கும் தகுதியற்றதாக, முற்றிலும் விஷமாக மாறியுள்ளது. அவ்வப்போது குப்பைகளுக்கு மர்மநபர்கள் தீ வைப்பதால் புகைமண்டலம் சூழ்ந்து சுவாசிக்க முடியாத சூழலும் நிலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில்...
திருநெல்வேலி மாநகராட்சியின் 55 வார்டுகளில் டன் கணக்கில் சேகரமாகும் குப்பைகள், ராமையன்பட்டி ஊராட்சியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. ஏற்கெனவே குப்பைகளால் வீசும் துர்நாற்றத்தையே தாங்கி கொள்ள முடியாமல் அருகில் வசிக்கும் மக்கள் தவித்து வரும் நிலையில், கூடுதல் தலைவலி கொடுப்பது போல், அந்த குப்பைக்கிடங்கு வளாகத்திலேயே இறைச்சிக் கழிவுகளில் இருந்து கால்நடை தீவனம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு, இயங்கி வருகிறது.

இதனால் இரட்டிப்பாக துர்நாற்றம் வெளியேறுவதோடு, தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தின் கழிவுநீர் கோடகன் கால்வாயில் கலந்து தண்ணீரும் கடுமையாக மாசடைந்து சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

விழுப்புரம் நகராட்சியில்...
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மூவேந்தர் நகர் பகுதியில், குடியிருப்புகளுக்கு நடுவே அமைந்துள்ள குப்பைக் கிடங்கில், குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு சிமெண்ட் ஆலைக்கு அனுப்பப்படும் வரை, நீண்ட காலமாக அகற்றப்படாமல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுமார் 5 கிலோ மீட்டருக்கு துர்நாற்றம் வீசுகிறது. தனியார் பள்ளி, திருமண மண்டபம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை அருகில் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளதால், அப்பகுதி வாசிகள் மட்டுமின்றி அவ்வழியாக சென்று வருவோரும் மூக்கை பொத்தியபடியே பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காவேரிப்பட்டினம் பேரூராட்சியில்...
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பேரூராட்சியில், சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி வைத்து, வாரத்திற்கு ஒரு முறை தீவைத்து எரிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாள் முழுவதும் குப்பைகள் எரிவதால், சாலையே தெரியாத அளவுக்கு புகை மண்டலம் சூழ்ந்து, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

ஒரு மித்த கோரிக்கை
துர்நாற்றம், காற்று, தண்ணீர் மாசு ஆகியவற்றை தாண்டி குப்பை கிடங்குகளால் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் வெவ்வேறாக இருந்தாலும், அவற்றை அகற்ற வேண்டும் என்பதும், ஊருக்கு வெளியே குடியிருப்புகள் இல்லாத பகுதியில் அமைக்க வேண்டும் என்பது தான் அனைத்து பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

அரசு தரப்பில் உறுதி
இதனிடையே, குப்பைகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டப்படுவதாக நமது நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியான அடுத்த நொடியே, குப்பைகள் விரைவில் அகற்றப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
.