Also Watch
Read this
By: Manigandan Raja

பெட்ரோல்- டீசல் விற்பனையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் :

மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விற்பனையில் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியதால், இந்தியாவில் பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 200 லிட்டர் வரை மட்டுமே எரிபொருள் வாங்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டு, அதன் வழியே இந்திய வணிக கப்பல்கள் பயணத்தை தொடங்கியதால் ஜூன் 12-ஆம் தேதி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டு, நாளை முதல் வழக்கமான நடைமுறை தொடரும் என அறிவித்துள்ளது.
மீண்டும் தொகுதி மறுவரையறையை கையில் எடுக்கும் பாஜக..?
அனைத்து மாநிலங்களிலும் லோக்சபா எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் வரை உயர்த்த பல்வேறு வகைகளில் மத்திய பாஜக அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சிறப்புக் கூட்டத்தொடரின் போது பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியில் முடிந்தது.
ஆனால், தற்போது திரிணாமுல் மற்றும் உத்தவ் சிவசேனா கட்சிகள் உடைந்து சில எம்பிக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவதால் மீண்டும் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சாலையில் பைக்கில் சென்ற போது திடீரென நிலச்சரிவு :

அருணாச்சல பிரதேசத்தின் கீழ் சியாங் மாவட்டத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அவ்வழியாக பைக்கில் சென்ற நபர் அடித்துச் செல்லப்பட்டு நல்வாய்ப்பாக உயிருடன் தப்பிய சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அம்மாநிலம் முழுவதும் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள், வீடுகள் பலத்த சேதமடைந்து வருகின்றன. குறிப்பாக பல முக்கிய பாலங்கள் வெள்ளப் பெருக்கில் சேதமடைந்ததால் 12 மாவட்டங்களில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது.