Also Watch
Read this
அரசுத் திட்டங்களை ஆய்வு செய்வது போன்ற செயல்களில் ஆளுநர் தேவையின்றி ஈடுபடுவதை ஏற்க முடியாது என்று, அமைச்சர் நிர்மல் குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதிகாரத்தை மீறி செயல்படும் ஆளுநருக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்றும், ஆளுநர் தரப்பில் இருந்து அழைப்பு வந்தாலும், அரசின் அனுமதி பெறாமல் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறி உள்ளார்.

மதுரையில் அமைச்சர் ஆய்வு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது;
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் அவர்களது அதிகாரத்துக்கு உட்பட்டு ஆய்வு செய்யலாம். எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர், எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை இந்த அரசு என்றைக்கும் அனுமதிக்காது. தேவையில்லாமல் ஆளுநர், அரசின் நிர்வாகத்தில் தலையிட்டால் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்படும்.

அதிகாரம் கிடையாது...
எந்த அதிகாரிகளும் அரசின் அனுமதி பெறாமல் ஆளுநருக்கு, கண்டிப்பாக ஒத்துழைப்பு தரக் கூடாது என்பதை அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் தேவையில்லாமல் ஆய்வு செய்யக் கூடாது.

அவ்வாறாக தலையிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

ஆளுநர் ஆய்வு, கண்டனம்
மதுரைக்கு வந்திருந்த ஆளுநர் அர்லேகர் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரை அழைத்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved