நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்ட விவகாரத்தில், காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் தொடங்கி காங்கிரசின் மொத்த நிர்வாகிகளும் ராகுல் காந்தியின் கருத்தை சுட்டிக் காட்டி விஜய்க்கு ஆதரவாக பதிவு போட்டிருப்பது கவனிக்க வைத்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, விஜய்க்கு ஆதரவாக இவ்வளவு தூரம் காங்கிரஸ் இறங்கி அடிப்பது பாஜக எதிர்ப்பா? அல்லது விஜய் மீதான அளவு கடந்த பாசமா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக திரைத்துறையில் இருந்து குரல் வரும் முன்பே ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சியும், கங்கணம் கட்டிக் கொண்டு ஆதரவு தெரிவித்து வருவதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது தான். கடைசி நேரத்தில் சென்சார் போர்டு கை விரித்ததால், விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகனை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 18ஆம் தேதி தணிக்கை சான்றிதழ் கேட்டு படக்குழு விண்ணப்பித்த நிலையில், 22ஆம் தேதி U/A சான்றிதழ் தருவதாக பரிந்துரைத்த சென்சார் வாரியம், மீண்டும் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய நிலையில், தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிக்கல் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸின் மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரையிலும் பதிவுகள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது. அந்த வகையில், காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், அரசியல் கருத்து வேறுபாட்டுக்காக ஒரு படைப்பை, கலையை குறி வைப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியதோடு, 56 இஞ்ச் மார்பளவு கொண்ட பிரதமர் மோடி முடிந்தால் அரசியல்வாதி விஜய்யிடம் மோதி பார்க்கட்டும், நடிகர் விஜய்யிடம் மோதக் கூடாது என காட்டமாக பதிவிட்டுள்ளார். அதேபோல, காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தியும், கடந்த 2017ஆம் ஆண்டு மெர்சல் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக ராகுல்காந்தி போட்ட பதிவை சுட்டிக்காட்டி, ஜனநாயகனை ஒடுக்குவதன் மூலம் பிரதமர் மோடி மீண்டும் தமிழர்களை அவமானப்படுத்தியிருப்பதாக சாடியிருக்கிறார்.அதேபோல, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ED, IT, CBI போல சென்சார் போர்டு அமைப்பும் பாஜகவின் கைப்பாவையாக மாறியிருக்கிறது என விமர்சித்திருப்பதோடு, கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவது நல்லது அல்ல என பதிவிட்டுள்ளார். அந்த வரிசையில் காங்கிரஸின் எம்.பி. மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் ஆகியோரும் விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டு இருப்பது கவனிக்க வைத்துள்ளது. கரூர் விவகாரத்திலும் காங்கிரஸ் தரப்பில் தான் விஜய்க்கு முதல் ஆதரவு வந்தது. தற்போது ஜனநாயகன் பட விவகாரத்திற்கும் அரசியல் கட்சிகளில் காங்கிரஸ் தான் குரல் கொடுத்து வருகிறது. பாஜக ஆதரவில் தான் விஜய் கட்சி தொடங்கியதாக விஜய்யை திமுக விமர்சித்து வரும் நிலையில், அதற்கு எதிர் மாறாக விஜய்க்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் காங்கிரஸ் முதல் ஆளாக வந்து நிற்பது ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளிப் போனதற்கு யார் காரணம் என விஜய்யே இன்னும் வாய் திறந்து பேசாத நிலையில், காங்கிரஸின் மொத்த பேரும் பிரதமர் மோடி, பாஜகவை குறி வைத்து விமர்சனங்களை அடுக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே, காங்கிரஸ் த.வெ.க.வுடன் கூட்டணி என அரசல், புரசலாக பேசப்பட்டு வரும் நிலையில், ஜனநாயகன் படத்திற்கு காங்கிரஸ் கொடுக்கும் ஆதரவை அப்படியே கடந்து சென்று விட முடியாது. விஜய் மாதிரியான உச்ச நட்சத்திரத்தின் படத்தை பாஜக முடக்கி வைத்திருக்கிறது என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் முன் எடுத்து வரும் நிலையில், வெறுமனே பாஜகவை எதிர்க்க விஜய்யின் ஜனநாயகன் படத்தை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறதா? அல்லது கூட்டணி கணக்கில் விஜய்க்கு தார்மீக ஆதரவு கொடுக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. டெல்லி மேலிடத்தின் உத்தரவு இல்லாமல் திமுகவை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவராக இருக்கும் நடிகர் விஜய்யின் படத்திற்கு, திமுக கூட்ட ணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்க முடியாது என்பதால், காங்கிரஸின் ஆதரவுக்கு பின்னணியில் வேறொரு கணக்கு இருக்கலாம் என்றே கணிக்கப்படுகிறது. பாஜக தான் விஜய்யின் படத்தை முடக்கி வைத்திருக்கிறது என்ற காங்கிரஸின் பிரச்சாரம் எந்த அளவுக்கு யாருக்கு கை கொடுக்க போகிறது என்பது போக போக தான் தெரியும்.இதனிடையே, ஜனநாயகன் படம் தள்ளி போனதற்கு பின்னணியில் பாஜக இருப்பதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டு குறித்து பேசியிருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என காங்கிரஸ் கூறுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமாக இருக்கிறது என சாடினார். மேலும், சென்சார் சான்றிதழ் கொடுக்காததற்கு என்ன காரணம் என தணிக்கை வாரியம் நீதிமன்றத்திலேயே பதிலளித்து விட்டது என்ற தமிழிசை, சட்ட ரீதியான நடை முறைகளுக்கு பின்பு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை பாஜகவும் எதிர்பார்த்து கொண்டிருப்பதாக கூறினார். இது ஒருபக்கம் இருக்க, ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், படத்திற்காக பாஜகவுடன் சமரசம் பேசி விடுவார் விஜய் என திமுகவினர் கூறி வந்தனர். ஆனால், விஜய்யின் அறிவுறுத்தலில் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றம் சென்று விட்ட நிலையில், அந்த விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஜனநாயகன் பட விவகாரம் 2017ல் மெர்சல் ரிலீஸில் இருந்தது போல, விஜய் வெர்சஸ் பாஜக என மாறியிருக்கிறது. இதையும் பாருங்கள் - நீதிமன்றத்தில் காரசார விவாதம்