பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் யார்?என்பது தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இருதரப்பும் தங்களுக்கு சாதகமானது என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நிலையில், நீதிமன்றம் கூறியது என்ன? ராமதாஸ் தரப்பு சொல்வதும் அன்புமணி தரப்பு மறுப்பதும் என்ன? என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.பாளையத்தம்மன் பட குழந்தையை போல தான் பாட்டாளி மக்கள் கட்சியும் யாருக்கு சொந்தம்?என ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே பந்தாடப்பட்டு வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பெற்ற குழந்தை தனக்கே சொந்தம் என்பது போல் ராமதாஸ் ஒரு பக்கமும், இடையில் உண்டியலில் விழுந்தது எனக்கு தான் சொந்தம் என அன்புமணி மறுபக்கமும் மல்லுக்கட்டி நிற்பது, கன்னித்தீவு தொடர்போல முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.பாமகவில் இளைஞரணி தலைவர் நியமனத்தில் வெடித்த மோதல், ஆயிரம் ஜன்னல் வீடு குடும்பத்தையே இரண்டாக பிளந்துவிட்ட நிலையில், இப்போது நீதிமன்ற படியேறி இருதரப்பும் சட்ட ரீதியாகவும் மோத தயாராகி விட்டனர். ஆயிரம் தான் இருந்தாலும், தந்தை மகன் பிரச்னை தானே, நேராக பார்த்து பேசிவிட்டால் சரியாகி விடும் என பாமகவினரும் எவ்வளவோ தங்களால் முடிந்தவரை முட்டுக்கொடுத்து பேசினாலும், கடைசியில் பேசியவர்களும் முட்டிக்கொண்டு நடுரோட்டில் புரண்டது தான் மிச்சம். இரு தரப்புக்குமிடையே யார் யாரோ பஞ்சாயத்து பேசி சமாதானம் செய்ய முயன்றும் அனைத்து முயற்சிகளுமே வீணாகத்தான் போயின. இவ்வளவு ஏன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே இருவரையும் அழைத்து நேரில் சமாதானம் பேச முயன்றதெல்லாம் தனிக்கதை.இந்நிலையில் தான், சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல் தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒற்றை நோட்டீஸ் இருதரப்பையும் சீண்டிவிட்டு நீதிமன்றம் செல்ல வைத்துள்ளது. பாமகவுக்கு அன்புமணியே தலைவர் என்பதை போல குறிப்பிடும் அந்த ஒற்றை நோட்டீசை எதிர்த்து ராமதாஸ் தரப்பு டெல்லி நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியது. அங்கேயும் இருதரப்பு வாதமும் காதை துளைத்துவிட்டன. இறுதியில் பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் உட்கட்சி மோதலில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும் சிவில் நீதிமன்றமே இதில் தீர்வு காணமுடியும் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை வைத்துக் கொண்டு ராமதாஸும் தனது தரப்புக்கே வெற்றி கிடைத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டும் இறுதியில் தர்மத்தின் வாழ்வுதனை என்ற டயலாக்கையும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தார். அன்புமணி தான் பாமக தலைவர் என தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் ரத்து செய்ததாகவும் கூறி ஜி.கே.மணி கொண்டாடி தீர்த்தார்.இந்நிலையில் தான், அன்புமணியின் ஆதரவாளரும் பாமக வழக்கறிஞருமான பாலு சென்னையில் பாமக தலைமையலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜி.கே.மணி தீர்ப்பின் ஒரு பகுதியை மட்டும் காண்பித்து தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்துவிட்டதாக பொய்பரப்புரை செய்வதாகவும், நீதிமன்றம் எந்த இடத்திலும் அன்புமணியை தலைவர் என குறிப்பிட்ட தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை ரத்து செய்வதாக தெரிவிக்கவில்லை என்றும் அடித்துக் கூறினார்.முடிந்தால் ஜி.கே.மணி தரப்பு, சிவில் நீதிமன்றத்தை நாடட்டும் என சவால் விடுத்த பாலு, மாம்பழம் சின்னத்தை பற்றி நீதிமன்றம் எதுவும் தெரிவிக்காததால் அன்புமணிக்கே மாம்பழ சின்னம் சொந்தம் என கூறினார். ராமதாசின் முதுமையை பயன்படுத்திக் கொண்டு அவர் கையை கொண்டு அன்புமணியின் கண்ணை குத்தும் வேலையில் ஜிகே.மணி ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய பாலு, ஜி.கே.மணி ஏன் டெல்லியில் முகாமிட்டுள்ளார் என்பதன் ரகசியத்தை எல்லாம் கூறிவிட்டால் அய்யாவுக்கு தான் அவப்பெயர் ஏற்படும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.பொதுக்குழு போராட்டம், குடும்ப போராட்டம், நடுத்தெரு போராட்டம் இறுதியில் சட்டப்போராட்டம் வரை நடந்துவிட்ட போதிலும் பாமகவுக்கு யார் தலைவர் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரிந்தபாடில்லை.