Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 10:50 AM
வரும் தேர்தலில், வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார், திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் மற்றும் கூட்டணி ஒப்பந்தங்களை இறுதி செய்வது குறித்து விவாதிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று, மார்ச் 16, 2026 திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, பிரச்சார வியூகம் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
என்ன பேசினார் முதல்வர்?
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நம்முடைய பலமே, நம்முடைய கட்சியின் கட்டுமானம் தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம், இருக்க வேண்டும். தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பது தான் எனது வேண்டுகோள்.
பாஜக வியூகம்
தமிழ்நாட்டில் எப்படியாவது, பாஜக காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால், சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.
திமுக வேட்பாளராக...
அமைச்சர்கள் இனிமேல், சென்னையில் இருப்பதை விடவும் சொந்த மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும். வேட்பாளர் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவரே நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை.
திமுக தொண்டர்கள் தான்...
பவள விழா கொண்டாடிய கட்சி, ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்க காரணம், கோடிக்கணக்கான திமுக தொண்டர்கள் தான் என்பதை நான் அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்குக் காரணம், நிர்வாகிகள், தொண்டர்கள் தான். இத்தகைய நன்றி உணர்வோடு தான் நாம் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved