Also Watch
Read this
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்காமல் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவெடுக்க காலம் தாழ்த்தி வருவதால் நொடிக்கு நொடி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2 முறை ஆளுநருடன் விஜய் சந்திப்பு
தமிழக அரசியல் வரலாற்றிலேயே 2026 சட்டமன்ற தேர்தல் திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும் கூட அடுத்து என்ன நடக்கும் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெகவுக்கு 10 இடங்கள் குறைவாக இருந்தது.

இருப்பினும் தனி பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. முதலில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அர்லேக்கர் கூறிய நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தவெக கூட்டணியில் ஐக்கியமானது. இதனால், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து தவெகவின் பலம் 113 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆளுநரோ பெரும்பான்மை இருந்தால் தான் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும் என விடாப்பிடியாக இருப்பதால் விஜய் முதலமைச்சர் ஆவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

118 எங்கே? ஆளுநர் திட்டவட்டம்
புதன்கிழமை ஆளுநர் அர்லேக்கரை விஜய் சந்தித்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் ஆளுநர் அழைப்பின் பேரில் லோக் பவன் சென்றார். சுமார் 40 நிமிடங்கள் நடந்த ஆலோசனையில் பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள்? என்று விஜய்யிடம் விளக்கம் கேட்ட ஆளுநர், பெரும்பான்மை இல்லாத நிலையில் புதிய அரசு கவிழும் சூழல் ஏற்படக் கூடாது எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்துடன் வருமாறு விஜய்க்கு ஆளுநர் அறிவுரை கொடுத்த ஆளுநர் அர்லேக்கர், நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என எப்படி நம்புகிறீர்கள்? என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அதோடு, 118 எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என ஆளுநர் அர்லேக்கர் திட்டவட்டமாக கூறியதாக சொல்லப் படுகிறது.

ஆளுநர் மாளிகை விளக்கம்
இந்நிலையில், ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜயிடம் ஆளுநர் கூறியது என்ன? என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில், ஆட்சியமைக்க தேவையான அளவு பெரும்பான்மை தவெகவுக்கு இல்லை எனவும், ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமெனில் தவெக தனது பெரும்பான்மை யை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆதரவு தேடும் தவெக
இதனிடையே, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிகவின் ஆதரவை கோர தவெக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களுக்கு நேரில் சென்ற தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கடிதத்தை வாங்கிக் கொண்ட கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்கள், முடிவை நாளைக்கு சொல்வதாக கூறியுள்ளனர். கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார், ஆளுநரிடம் முறைப்படி கடிதம் கொடுத்திருக்கிறோம் எனவும், சட்டப்படி ஆளுநர் முடிவெடுப்பார் என நம்புவதாகவும் கூறினார். அதோடு, என்.டி.ஏ., கூட்டணியில் எந்த கட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்ற நிர்மல்குமார், கம்யூனிஸ்ட் கட்சிகள் நல்ல முடிவெடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி
அதேபோல, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு மண்ணடியிலுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி அலுவலகத்திற்கு சென்று அருண்ராஜ் ஆதரவு கோரினார். அப்போது, திமுக என்ன சொல்கிறதோ, அதை தான் கேட்போம் என காதர் மொய்தீன் திட்டவட்டமாக கூறி விட, அருண்ராஜ்ஜும் அங்கிருந்து புறப்பட்டார்.

இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ், விஜய்யை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என தமிழக மக்கள் தீர்ப்பு எழுதியிருப்பதாக கூறியதோடு, அதற்கு மாற்றாக திமுகவும், அதிமுகவும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருவதாக கூறினார்.

அடுத்து என்ன? எகிறும் எதிர்பார்ப்பு
இது ஒரு பக்கம் இருக்க, விசிக தலைவர் திருமாவளவனிடம் விஜய்யே நேரடியாக தொலைபேசியில் பேசி ஆதரவு கோரியதாக தகவலும் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து இக்கட்டான சூழல் நிலவி வரும் நிலையில், விஜய் எப்படி, எப்போது ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைக்கு கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளையே விஜய் மலை போல நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால், தவெகவினர் நேரில் சென்று ஆதரவு கேட்டும் விசிகவும், கம்யூனிஸ்டும் இன்னும் உரிய பதில் கொடுக்காமல் இருப்பதால் ஆட்சி அமைக்க முடியாமல் தவெக திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் எடுக்கும் முடிவை பொறுத்து தான் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க முடியுமா? முடியாதா? என்பது தெரியவரும். ஒரு வேளை விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தர மறுத்து விட்டால், விஜய் முதலமைச்சர் ஆக முடியாது என்பதோடு, அடுத்தக்கட்டமாக தமிழ்நாட்டில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved